மலையக மக்கள் தொடர்பில் அனுதாப வார்த்தைகளை பேசி வாக்கு சேர்க்கிறது ஜே.வி.பி

0
169

மலையக தமிழர்கள் இந்நாட்டில் எதிர் கொள்ளும் அவலங்களுக்கு மலையக அரசியல் கட்சிகளே முற்று முழுதான காரணம் என ஜேவிபி காட்ட முயல்கிறது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவரது முகநூல் பதிவு வருமாறு,

மலையக அவலங்களுக்கு ஒரு பிரதான காரணமும், ஒரு துணை காரணமும் என இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

பிரதான காரணம்;

சிங்கள பெரும்பான்மை கட்சிகள், 1950 களிலிருந்து அப்பாவி சிங்கள மக்கள் மத்தியிலே விதைத்த மலையக மக்களுக்கு எதிரான பேரினவாத சிந்தனை ஆகும். இதற்குள் ஜேவிபி என்ற இன்றைய என்பிபி, மலையக தமிழர்களை, வகுப்பு நடத்தி, அந்நியர்களாக அடையாளம் காட்டியது. இந்திய ஏகாதிபத்தியத்தின் அம்சமாக மலையக தமிழர்களை காட்டியது.

துணை காரணம்;

மலையகத்தில் ஒரு பிற்போக்கு கும்பல், மாறி மாறி வந்த எல்லா அரசாங்கங்களிலும் சுமார் 45 வருடங்கள் அங்கம் வகித்து, மலையக தமிழர்களை ஏமாற்றியது.

இந்த வரலாற்று பின்னணியில், 2015ம் ஆண்டு தோன்றிய மலையக முற்போக்கு அணிதான், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகும். நாம் நாற்பது வருடங்கள் ஆட்சியில் இருக்கவில்லை. ஆக, நான்கே வருடங்கள்தான் நாம் ஆட்சியில் இருந்தோம்.

எமது காணி உரிமையை அமைச்சரவைக்கு கொண்டு சென்று. எமது முற்போக்கு பயணத்தை ஆரம்பித்துள்ளோம். தேசிய அரங்கில் மலையக மக்களின் அபிலாஷைகளை மலையக சாசனமாக (Malaiyaha Charter) முன் வைத்தோம். அதில் காணி உரிமை எமது பிரதான கோஷம்.

ஆனால், ஜேவிபி என்ற இன்றைய என்பிபி, மலையகத்தின் முற்போக்கு அணியையும், பிற்போக்கு கும்பலையும், ஒரே கூடையில் போட்டு பிரசாரம் செய்கிறது. இது ஒரு அரசியல் கபடத்தனம்.

இதற்கு இந்த கட்சியில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் மலையக தமிழ் நபர்கள் விஷயம் விளங்கியும், விளங்காமலும் துணை போகிறார்கள். இந்த “புதிய புரட்சியாளர்களை” வைத்து மலையக அரசியல்வாதிகளை கரித்து கொட்ட செய்து ஜேவிபி தனக்கு தானே கைதட்டி கொள்கிறது.

மலையக பிற்போக்கு கும்பலை விரட்டி அடியுங்கள்! நாங்கள் அதைதான் செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால், எங்களை நோக்கி வராதீர்கள்.

பெருந்தோட்ட மலையக மக்களின் காணி உரிமை பற்றி திட்டவட்டமாக எதுவும் பேசாமல், ஜேவிபி தலைமை கள்ள மௌனம் காக்கிறது. சும்மா மலையக மக்கள் தொடர்பில் அனுதாப வார்த்தைகளை மாத்திரம் பேசி வாக்கு சேர்க்கிறது.

நான் பலமுறை நாடாளுமன்றத்திலும், வெளியேயும், அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமாரவை விளித்து கூறியுள்ளேன். இப்போதும் கூறுகிறேன். “நண்பர் அனுர, எமக்கு அனுதாபம் வேண்டாம்! நியாயம்தான் வேண்டும்!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here