Sunday, November 24, 2024

Latest Posts

பொதுத் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு? தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

பொதுத் தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கோ அல்லது சுயாதீன குழுக்களுக்கோ வாக்களித்திருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் விளக்கமளித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்,

தபால் மூல வாக்களிப்பும், வாக்கு சீட்டு விநியோகமும் நிறைவடைந்துள்ளன. வாக்கு சீட்டுக்கள் கிடைக்கப் பெறாதவர்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று அவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

சகல பிரசார நடவடிக்கைகளும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதன் பின்னர் அமைதி காலமாகும். இக்காலப்பகுதியில் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாது.

அத்தோடு வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்கள் 12ஆம் திகதி நள்ளிரவுடன் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இம்முறை இருவகையான வாக்குசீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.

பொலன்னறுவை, மொனராகலை, கேகாலை மாவட்டங்களுக்கு ஒரே நிரலிலான வாக்கு சீட்டுக்கள் விநியோகிகப்படும். ஏனைய 19 மாவட்டங்களுக்கும் இரு நிரல்களைக் கொண்ட வாக்கு சீட்டுக்கள் விநியோகிகப்படும்.

வாக்களிக்கும் போது தாம் தெரிவு செய்யும் கட்சி சின்னத்துக்கு அல்லது சுயாதீன குழுவுக்கு அருகில் புள்ளடியிட வேண்டும். அவ்வாறு புள்ளடியிடப்படாத வாக்குசீட்டுக்கள் நிராகரிக்கப்படும்.

அதன் பின்னர் தமது விருப்பத்தெரிவான வேட்பாளரது இலக்கத்துக்கு புள்ளடியிட வேண்டும். ஒரு வாக்களருக்கு மூன்று விருப்பத் தெரிவுகள் உள்ளன.

வேட்பாளர்களது இலக்கங்கள் அடங்கிய பெயர் பட்டியல் இம்முறை வீடுகளுக்கே விநியோகிகப்பட்டுள்ளது. எனவே அதில் தாம் வாக்களிக்கவுள்ள வேட்பாளர்களது எண்களை தெளிவாக அவதானிக்க முடியும்.

மேலே தெரிவு செய்யப்படும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும். மாறாக ஒரு கட்சியை தெரிவு செய்து, பிரிதொரு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது.

அவ்வாறான வாக்கு சீட்டுக்கள் நிராகரிக்கப்படும். அதே போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கோ அல்லது சுயாதீன குழுக்களுக்கோ வாக்களித்திருந்தால் அந்த வாக்குகளும் நிராகரிக்கப்படும். மேலும் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் அந்த வாக்கும் நிராகரிக்கப்படும் என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.