Monday, November 18, 2024

Latest Posts

புதிய அரசமைப்பு வரைபு தொடர்பான சுமந்திரனின் கோரிக்கையை நிராகரித்தார் கஜேந்திரகுமார்

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேசியம் சார்ந்த அரசியலுக்கும் கொள்கை சார்ந்த – தமிழ் மக்களுடைய இருப்பு சார்ந்த விடயங்களுக்கும் எதிர்காலம் மிகவும் சவாலுக்குரிய ஒன்றாகவே நாங்கள் பார்க்கின்றோம். இதில் வரப் போகின்ற ஐந்து வருடங்களில் மிக முக்கியமாக வரப் போகின்ற முதலாவது வருடம்தான்.

தேர்தல் முடிவுக்குப் பிற்பாடு கூட ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தங்களது கட்சிக்கு வடக்கில் ஆசனங்கள் கிடைத்துள்ளன எனவும்,  இனவாதத்தை மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும் சொல்லலியுள்ளார். அந்தக் கருத்திலேயே தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய ஆபத்துக்கள் மிகத் தெளிவாக அம்பலமாகியுள்ளன.

தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களுடைய உரிமை சார்ந்த நிலைப்பாட்டுக்கு இத்தனை வருடங்களாகத் தமிழ் மக்கள் ஆணை வழங்கி வந்திருக்கின்ற நிலையில் அந்த ஆணையை இனவாதம் என்று சொல்லிக் கொச்சைப்படுத்துகின்ற வகையில் ரில்வின் சில்வா பேசியுள்ளார்.

உண்மையில் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகத் தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டை எடுத்து வந்திருக்கின்ற நிலையில் அந்தத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை இனவாத நிலைப்பாடாகக் கொச்சைப்படுத்தி இன்றைக்குத் தேர்தல் முறையில் உள்ள ஒரு சில முறைகளால் எண்ணிக்கையில் ஒரு சில ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை நிராகரிக்கின்ற என்று சொல்கின்ற கருத்துக்கள் எந்தளவுக்கு ஆபத்து என்பதை எமது மக்கள் உணர வேண்டும்.

அந்தவகையில்தான் தேர்தல் காலத்திலும் நாம் எமது மக்களுக்குத்  தொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் சொல்லி வந்தோம். அதாவது இந்த அரசு தேர்தல் முடிந்த கையோடு 2015 முதல் 2019 வரை தயாரிக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற ஒற்றையாட்சி அரசமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு  நடவடிக்கை எடுக்கும் என்று சொன்னோம்.

அந்த ஒற்றையாட்சி ஏக்கிய ராஜ்ஜியவை நிராகரித்து எங்களுடைய மக்களின் ஆணையைக் காட்டி தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு தீர்வுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுப்போம் என்ற கருத்தைத்தான் நாங்கள் சொல்லியிருந்தோம்.

எதிர்காலத்தில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டித் தீர்வை எட்டுவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்க இருக்கின்றோம்.

அந்தச் செயற்பாடுகளோடு ஒத்துப்போவதற்குத் தயாராக இருக்கின்ற அனைத்து தரப்புகளோடும் செயற்பட நாங்கள் தயாராகவும் இருக்கின்றோம். விசேடமாக ஒற்றையாட்சி அரசமைப்பின் ஏக்கிய ராஜ்ஜிய  என்ற இடைக்கால அறிக்கையை வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகம் ஏற்றுக்கொள்ளாது என்ற செய்தியை அமைதியான முறையிலும், ஐனநாயக முறையிலும் வெளிப்படுத்துவதற்கும், அதனைத் திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் வெளிப்படுத்தி எங்களது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

அந்த நிலைப்பாட்டோடு ஒன்றிணைந்து போவதற்கு இருக்கின்ற அனைத்து தரப்புகளோடும் இணைந்து இந்த விடயங்களைக் கையாளுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த விடயத்தில் எம்மோடு இணைந்து செயற்படுவதற்கு முன்வருமாறு  அறைகூவலும் விடுக்கின்றோம்.  

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு விடயத்தை தமிழ் மக்கள் நிராகரிப்பார்களாக இருந்தால் அதுவே அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதோடு தேசிய மக்கள் சக்தி அரசு ஐக்கிய ராஜ்ஜிய என்ற ஒற்றையாட்சி பாதையைக் கைவிட்டு சமஷ்டி ஆட்சி முறையை ஏற்படுத்தக் கூடிய புதிய மேடையொன்றை உருவாக்கும். அந்த நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

ஏனென்றால் இன்றைக்கு இலங்கை அரசு சர்வதேச மட்டத்திலும், பொருளாதார ரீதியாகவும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் சர்வதேச சமூகத்தின் உதவி தேவை.

ஆனால், இலங்கையில் இனப் பிரச்சினை தீர்க்கப்பட்டு ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படாத வரை அந்த உதவிகள் கிடைக்காது. ஆகவே, அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நாங்கள் அந்த அழுத்தங்களைச் சரியான வகையில் கொடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில்தான் தமிழ்த் தேசியத்தோடு தாங்கள் பயணிக்கின்றதாகச் சொல்லக்கூடிய ஏனையவர்களோடும் சேர்ந்து பயணிக்கத் தயாராக இருக்கின்றோம்.” – என்றார்.

இதேவேளை, நல்லாட்சி காலத்தில் தங்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய அரசமைப்பு வரைபை அநுர அரசு மீளக் கொண்டு வரப் போவதாகவும், இந்த நேரத்தில் தான் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் அந்தச் செயற்பாட்டைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையாளுவார் என்றும் சுமந்திரன் தெரிவித்திருந்தார். இது குறித்த கேள்விக்குக் கஜேந்திரகுமார் பதிலளிக்கையில்,

“அவர் கூறுகின்றமை போன்று இந்த அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கின்ற விடயமல்ல. இன்றைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்.

ஆகையினால் அந்த வரைபுக்கு எதிராக அதை நாங்கள் தடுத்து இது எமது மக்களின் இணைப்பு முரணானது என்ற பலமான ஒரு செய்தியைக் கொடுப்பதன் ஊடாக அவர்கள் சரியான ஒரு வரைபைத் தயாரிப்பதற்கும், அவர்களது செயற்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும்தான் எங்களுடைய முயற்சிகளை முன்னெடுக்கப் போகின்றோம்.

அதற்குத் தமிழரசுக் கட்சியாக இருக்கலாம், ஏனைய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம், நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருக்கக் கூடிய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களாக இருக்கலாம், அனைவரையும் ஒன்றிணைத்து அந்த விடயங்களை முன்கொண்டு செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.