முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரமேஷ் பத்திரன மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (21) அழைக்கப்பட்டுள்ளனர்.
தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமைக்கான அமைச்சரவை ஆவணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர்களிடம் நீண்ட நேரம் விசாரிக்கப்பட்டு வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட உள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, முன்னாள் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன , முன்னாள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க (21ஆம் திகதி) காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் 18 முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் தரக்குறைவான மனித நோயெதிர்ப்பு பொருட்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட விரிவான விசாரணையில் தொடர்புடையவர்கள் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, மாளிகாகந்த நீதவான் லோசினி அபேவிக்ரமவிடம் இம்மாதம் 11ஆம் திகதி அறிவித்தார்.
அதன்படி முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரமேஷ் பத்திரன மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.