விரட்டியடிக்கப்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என அதன் முன்னாள் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவான குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒன்பது பேரும் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் உள்ளக ஜனநாயகத்தையும் கட்சியையும் பாதுகாப்பதற்காகவே தமது குழு போராடி வருவதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவாக இந்த அரசியல் பாத்திரத்தை ஆற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய அமைச்சில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பான பிரேரணையை முதலில் கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
பொறாமை, கபடம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றின் அடிப்படையில் இனி அரசியல் செய்ய முடியாது என தெரிவித்த அமைச்சர், இந்த நேரத்தில் நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
N.S