நாட்டின் ஸ்திரத்தன்மை தலைவர்களின் கொள்கைகளிலேயே தங்கியுள்ளது

0
10

உலக பௌத்த ஒத்துழைப்பு அமைப்பின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று காலை களனி, நாகானந்த சர்வதேச பௌத்த கல்வி நிறுவனத்தில் ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், தேரவாத, மகாயான மற்றும் வஜ்ரயான பௌத்த மரபுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, நவீனகால ஆட்சிமுறையில் பௌத்த போதனைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், பௌத்தத்தின் அடிப்படைக் கொள்கைகள் உலகெங்கிலும் உள்ள அரசியல் தலைவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கக்கூடியவை எனவும் வலியுறுத்தினார்.

பௌத்தத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஆன்மீக விடுதலையுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், ஒரு நாட்டை நிர்வகிப்பதற்கான நடைமுறை வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றன என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையும் முன்னேற்றமும் பெருமளவில் அதன் தலைவர்களின் நடத்தைகள் மற்றும் கொள்கைகளிலேயே தங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேர்மையான மற்றும் கொள்கைப் பற்றுறுதியுடன் கூடிய தலைமைத்துவம் தேசிய செழிப்புக்கான சூழலை உருவாக்கும் அதேவேளை, ஊழல் மற்றும் ஒழுக்கமற்ற ஆட்சிமுறை நாட்டில் ஸ்திரமின்மையையும் சீர்குலைவையும் ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தக் கொள்கைகள் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக்கூடியவை என வலியுறுத்திய அவர், நவீன உலகின் ஆட்சிமுறைக்கு பௌத்தம் நடைமுறைச் சாத்தியமானதும் காலத்திற்குப் பொருத்தமானதுமான வழிகாட்டுதல்களை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here