மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளது.
அதற்கமைய, தற்போதுள்ள மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு தொடர்சியாக பேணுவதற்கு, குறித்த முன்மொழிவில் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
மின்சாரக் கட்டண திருத்தத்தை எதிர்வரும் டிசம்பர் 06ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு விடுத்த அறிவித்தலுக்கு அமைய, குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மின்சார சபை விடுத்த கோரிக்கைக் கடிதத்திற்கு அமைய , 2 வார கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், அதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 06ஆம் திகதி கட்டணத் திருத்த யோசனையை சமர்ப்பிக்குமாறு, ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தவறும்பட்சத்தில் மின்சார சபைக்கு கிடைக்கும் இலாபத்திலிருந்து மின்சார பயன்பாட்டாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுமென, ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.