சபாநாயகர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக அசோக ரன்வெல நேற்றுமுன்தினம் அறிவித்த நிலையில் புதிய சபாநாயகர் தெரிவு நடைபெறவுள்ளது.
புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாகத் தெரிவு செய்யப்படவுள்ள சபாநாயகர் தொடர்பில் சர்ச்சை எழுந்தால் அன்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, புதிய சபாநாயகர் பதவிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன என்று அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதிச் சபாநாயகர் றிஸ்வி சாலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பதி, லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை எனவும், இன்று அல்லது நாளை இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் தெரியவருகின்றது.