தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக – ஒற்றுமையாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றமையால் அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுப்பது என்று அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சூம் செயலி ஊடாக நேற்று மாலை இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 75 ஆண்டு விழா சர்ச்சை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுவில் இறுதித் தீர்மானம் எடுப்பது எனத் தெரிவிக்கப்பட்டு அந்த விடயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாகப் பயணிப்பது குறிப்பாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாகச் செயற்படுவதன் நன்மை அதன் அவசியம் தொடர்பிலும் விளக்கினார்.
வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இப்போதுள்ள நிலையிலேயே தேர்தலை எதிர்கொள்வோம் என்று குறிப்பிட்டார். மேலும், கூட்டமைப்பின் வாக்காளர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் புதிய கூட்டுத் தேவையில்லை என்றும் அது நடைமுறைச் சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.
கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அனந்தி போன்று பலரும் வெளியேறிச் சென்று தனிக் கட்சி உருவாக்கினார்கள். இனிமேல் வந்து அதிக ஆசனங்களைக் கேட்பார்கள். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளால் கூட எமக்கு பல இடங்களில் பாதிப்பே” – என்று குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், எந்தக் கட்சியோடும் சேராமல் இலங்கைத் தமிழரசுக் கட்சியாகவே, தனித்துத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இந்த விடயங்கள் தொடர்பில் பரந்துபட்டு ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்று கருத்து வெளியிட்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்தே இனிவரும் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது குறித்து, இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கடும் வாக்குவாதத்தின் மத்தியில் இழுபறிபட்ட நிலை தொடர்ந்ததால், எதிர்வரும் 6ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுப்பது என்று தெரிவித்து கூட்டம் முடிவுறுத்தப்பட்டது.
N.S