புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இதுவரை வாகனங்கள் ஒதுக்கப்படவில்லை. தற்போது சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தற்போது பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
புதிய பாராளுமன்றத்தில் கடமையாற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம். எனினும், அவர்களுக்கு வாகனங்களை எப்போது ஒதுக்குவது என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யவில்லை. அவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள வாகனங்களையும் இறக்குமதி செய்யமாட்டோம்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை குறைக்க புதிய அரசு முடிவு செய்துள்ளது. வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.