Thursday, November 28, 2024

Latest Posts

இலங்கை – இந்திய உறவில் விரிசல் ! எச்சரிக்கிறார் திகாம்பரம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்புறவில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கும் வெளி சக்திகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனுமதி அளிக்க கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய பழனி திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுடனான நட்புறவு இலங்கைக்கு எந்தளவு முக்கியம் என்பது அண்மைய நெருக்கடி காலங்களில் இந்தியா இலங்கைக்கு புரிந்து வரும் மனிதாபிமான உதவிகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த நிலையில் சீன நாட்டினுடைய உளவு பார்க்கும் கப்பல் ஒன்று இலங்கை நோக்கி வருகை தருவதாக வெளியான செய்தியை அடுத்து இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படுவது போலான செய்திகள் பரவி வருவதாகவும் இது மிகவும் ஆபத்தான ஒன்று எனவும் பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார்.

சீனாவின் அதிநவீன உளவு பார்க்கும் கப்பல் மூலம் இந்தியா உளவு பார்க்கப்படுவதாக சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி இருப்பதாலும் இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தில் இந்த விடயம் பூதாகரமாக மாறி உள்ளதாலும் இலங்கை இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா சீனா போன்ற உலக நாடுகளுடன் இலங்கை நட்புறவை பேண வேண்டிய அதே சமயத்தில் பிரிதொரு நாட்டை உளவு பார்க்கவும் அல்லது பிரிதொரு நாட்டின் மீதான தங்களது பகையை தீர்த்துக் கொள்ளவும் இலங்கையை மத்திய தலமாக பயன்படுத்தும் முயற்சிக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே இது விடயத்தில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி இந்தியா உடனான உறவில் விரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென பழனி திகாம்பரம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.