“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேச விரும்புகின்றேன் எனக் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விடுத்த அழைப்பை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்நிலையில், ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாட விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நண்பர் சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது பற்றி கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களான நண்பர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., நண்பர் சித்தார்த்தன் எம்.பி. ஆகியோரும் என்னிடம் உரையாடியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களின் இந்த நிலைப்பாட்டை தமிழ் முற்போக்குக் கூட்டணி வரவேற்கின்றது, இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது பற்றி மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பு மற்றும் கருத்து இன்னமும் முழுமையாகத் தெளிவுபட எமக்குக் கிடைக்கவில்லை. நாடாளுமன்றக் கருத்துப் பகிர்வுடன் அது நிற்கின்றது. மாகாண சபை, பதின்மூன்று ‘பிளஸ்’ என்று ஆரம்பித்து விட்டு, இடையில், மாவட்ட சபை என்றும் ஜனாதிபதி ரணில் கூறினார். பின்னர் மாகாண சபைக்கு மாற்றீடாக மாவட்ட சபையை ஜனாதிபதி கூறவில்லை என்று அவரது அலுவலகம் விடுத்துள்ள விளக்கம் கூறுகின்றது.
முப்பது வருட கோர யுத்தம் காரணாமாக கடும் மனித உரிமை மீறல்களை வடக்கு, கிழக்கு உடன்பிறப்புகள் சந்தித்துள்ளார்கள். வரலாற்றில் பண்டா – செல்வா, டட்லி – செல்வா, இலங்கை – இந்திய ஒப்பந்தங்களிலும், சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் வடக்கு, கிழக்கு தமிழ் தலைமைகளுடன் நடத்திய பேச்சுகளின் போதும், ஈழத்தமிழ் தேசிய இனத்தின் உள்ளக சுயநிர்ணய உரிமை வெவ்வேறு வார்த்தைகளின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
ஆகவே, இந்த அடிப்படைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் நடத்தும் பேச்சுகளுக்கு நாம் எமது தார்மீக ஆதரவை எப்போதும் வழங்கி வந்துள்ளோம். இனியும் வழங்குவோம். நாம் ஒருபோதும், பேரினவாதத்துக்குத் துணைபோய், ஈழத்தமிழ் உடன்பிறப்புகளின் தேசிய அபிலாஷைகளுக்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நண்பர்கள் நன்கறிவார்கள்.
அதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே நிலவும் தென்னிலங்கை களநிலைமைகளுக்கு ஏற்ப எமது அரசியல் கோரிக்கைகள் மாறுபடுகின்றன. இது பற்றிய தெளிவான புரிதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது என்பதை நான் நன்கறிவேன். சிவில் சமூகத்துடனான தீவிர கலந்துரையாடலுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாரித்துள்ள, “இந்திய வம்சாவளி மலையக தமிழரின் தேசிய அரசியல் அபிலாஷைகள்” மற்றும் “நிலவரம்பற்ற சமுக சபை” ஆகிய கோரிக்கைகள் உள்ளடங்கிய ஆவணத்தை நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி, அதற்கான அவர்களது தார்மீக ஆதரவையும் கோர விரும்புகின்றோம்.
சகோதர இனங்கள், பரஸ்பரம் ஒன்றுக்கொன்று தார்மீக ஆதரவை வழங்கும் அதேவேளை, தத்தம் கள நிலைமைகளுக்கு ஏற்ப மாறுபட்ட கோரிக்கைகளுடன் அரசுடன் உரையாடுவதே சரியானது. தென்னிலங்கையில் நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை காரணமாகக் கொண்டு, ஈழத்தமிழ் கட்சிகளின் தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அல்லது வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளைக் காட்டி எமது தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அரசுக்குச் சந்தர்ப்பம் வழங்கக்கூடாது.
எமக்கிடையே பிளவுகள் இருக்கின்றன எனக் காட்டி, அரசு விளையாட நாம் இடம் கொடுக்கவும் கூடாது. அரசை அந்த இராஜதந்திரத்துடன் அணுகும் நடைமுறையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறும் பேச்சுகள் தீர்மானிக்க வேண்டும்” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
N.S