இலங்கையும் இந்தியாவும் இந்திய ரூபாய் ஊடான வர்த்தகத்தை விரிவாக்குவது மற்றும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.
இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் ஸ்ரீ சக்திகாந்த தாஸை நேற்று புதன்கிழமை (மார்ச் 29) சந்தித்தபோது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு மிகவும் சுமூகமான முறையில் இடம்பெற்றதாகவும் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் அரசதரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடித் தலையீட்டால் உருவான பொருளாதார ஸ்திரத்தன்மை, நாணய மாற்று ஏற்பாடுகள் மற்றும் கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் ஆகியவற்றின் பின்னணியில் இந்தியா இலங்கைக்கு அளித்து வரும் ஆதரவிற்காக மொரகொட ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை (EFF) பெற்றுக்கொடுக்க உதவியமைக்காகவும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் மின்சாரம், எரிசக்தி, துறைமுகங்கள், உள்கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற துறைகளில் இந்தியா ஆற்றக்கூடிய முக்கிய பங்கு குறித்தும் இருவரும விவாதித்துள்ளனர்.
N.S