Saturday, November 23, 2024

Latest Posts

பொருளாதார நெருக்கடிகளால் வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள்!

“எங்கள் வவுனிக்குள கிராமம் மிக அழகானது. எனது நண்பிகளுடன் தினமும் ஆசை ஆசையாய் கல்விகற்க பாடசாலைக்குச் செல்வேன். ஆங்கிலப்பாடம் எனக்கு மிகவும் விருப்பமான பாடம். வகுப்பாசிரியை உன் கனவு என்ன? என கேட்கும்போதெல்லாம் ஓர் ஆசிரியையாக வரவேண்டும் என்றே கூறுவேன். உண்மையில் அதுதான் என் கனவும் இலட்சியமும்கூட. ஆனால், தந்தையின் குடிப்பழக்கத்தாலும் குடும்பத்தின் வறுமையாலும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு என் கனவுகள் கலைந்துவிட்டன. மீண்டும் பள்ளிக்குப் போவேனா என்ற பேராவலுடன் காத்திருக்கிறேன்” – என்று பத்து வயது சிறுமியான மதியரசி அழுதுகொண்டே கூறினாள்.

வவுனியா மாவட்டதில் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்;த்தப்படுவதில் அதிகரிப்பு

வவுனியா மாவட்டம், வட மாகாணத்தில் இரண்டாவது அதிக சனத்தொகையை கொண்ட மாவட்டமாகும். இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி இங்கு வாழும் நலிவடைந்த மக்களையும் பாதித்துள்ளது. இலங்கையில் கிராமப்புற மக்களே அதிகளவாக இந்த நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளனர். அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளால் சுயதொழில் நடவடிக்கைகள், விவசாய நடவடிக்கைள் மற்றும் எந்தவொரு தொழிலையும் முன்னெடுக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோன்று குடும்ப தலைவர்களின் மதுபாவனை அதிகரிப்பால் பல குடும்பங்கள் சிதைந்து போயுள்ளன.

வவுனிக்குளம் கிராமத்தில் குடும்பத் தலைவரின் மதுபாவனையால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சொந்த வீடு நிலத்தை விட்டு தனது ஐந்து பிள்ளைகளுடன் வெளியேறிய தாய்தான் வாசுகி. தான் உழைக்கும் அன்றாட பணத்தை தனது கணவனின் மதுபாவனைக்கு கொடுக்க வேண்டிய நிர்பந்தம் தொடர்ச்சியாக அவளுக்கு ஏற்பட்டதால் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் அவர்களது கல்வியையும் கருத்திற்கொண்டு வாசுகி தாண்டிக்குளத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினாள்.

“என் கணவனின் குடிப்பழக்கத்தால் கடந்த 23 வருடங்களாக நான் நிம்மதியில்லாத வாழ்க்கையையே வாழ்கிறேன். எனக்கு இரண்டு ஆண் மற்றும் மூன்று பெண் பிள்ளைகள். கணவனைப் பார்த்து மூத்த மகனும், மூன்றாவது மகனும் மதுவுக்கு அடிமையாகி எங்களைவிட்டு பிரிந்து வாழ்;கின்றனர். மூத்தவனுக்கு அடுத்தவள் என் மகள் தயாராணி. மகன்மார் மதுவுக்கு அடிமையானதால் 16 வயதுமிக்க மூத்தவனுக்கு அடுத்தவளான மகளை கொழும்புக்கு பணிக்கு அனுப்பினேன். நான்காவது எனது பெண் பிள்ளை மாத்திரமே கல்வி கற்கிறாள். குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியால் கடைசியாக பிறந்த மதியரசியின் ஆசிரியர் கனவையும் கலைத்துவிட்;டேன்.” – என தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினாள் வாசுகி.

வவுனியா மாவட்டத்தில் நலிவடைந்த குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் மதுவுக்கு அடிமையாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாசுகியின் குடும்பத்தை போல எத்தனையோ குடும்பகளில் வாழும் பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. இவர்களின் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களின் பிள்ளைகளின் கல்வி குறித்து சிந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள அரச நிறுவனங்களின் உதவிகளையும், முறையான பொருளாதாரத் திட்டங்களையும் எதிர்பார்க்கின்றனர்.

“இலங்கையில் நகரப்புறங்களில் வாழும் மக்களே ஓரளவு வசதி வாய்ப்புடன் வாழ்க்கின்றனர். ஆனால், கிராமப்புறங்களில் வாழும் மக்கள் பொருளாதார நெக்கடிகளால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வவுனியா வடக்கு, தெற்கு கல்வி வலயங்களுக்குட்பட்ட கிராமங்களில் பல சிறுவர்களின் கல்வி இடைநிறுத்தப்பட்டு பண்ணைகளிலும் நகர்ப்புற கடைகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்” – என வவுனியா வலயக்கல்;வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் இராஜரத்தினம் கூறுகிறார்.

கிராமபுரங்களில் அதிகமாகும் பாடசாலை விடைவிலகல்கள் 

வவுனியா வடக்குப் பகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் 95 மாணவர்களும் தெற்கு பகுதியில் 298 பேரும் தமது கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளனர். மாணவர்களின் இடைவிலகல் தொடர்ச்சியான அதிகரிப்பையே காட்டுவதால் செட்டிக்குளம் மற்றும் சிங்கள பிரதேசங்களில் மாவணர்களின் இடைவிலகல்கள் குறித்த கண்காணிப்பு ஆய்வுகளை நடத்த மாவட்ட சிறுவர் பாதுகாப்பு குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழ் பகுதிகளைவிட சிங்கள கிராமங்களில் இடைவிலகல் அதிகமாக உள்ளதாக மடுகந்த பாடசாலையின் ஆசிரியர் ரஞ்சன் ரணில் ஹேமசிறி கூறுகிறார்.

“வடக்கு மாகாணத்தில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதாக எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகுவதில்லை. ஆனால், நாம் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளும்போது செட்டிக்குளம், ஆரியகுளம், பட்டிக்குடியிருப்பு, பெரிய தம்பனை உட்பட பல கிராமங்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது’’ என வவுனியா மாவட்ட செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி நந்தசீலன் கூறுகிறார்.

வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவது குறித்து விரைவான ஆய்வுகளை துறைசார் அரச நிறுவனங்கள் நடத்த வேண்டுமென்பதுடன் பாடசாலை இடைவிலகல்கள் குறித்து கிராமபுற பாடசாலை நிர்வாகங்களும் பெற்றோரும் தீவிர அவதானம் செலுத்த வேண்டும் என்பதும் களஆய்வுகளில் தெளிவாகிறது.

நகர்ப்புற பாடசாலைகளில் மாணவர்களின் இடைவிலகல் மிகவும் அரிதென வவுனியா மத்திய தமிழ் மகா வித்தியாலய அதிபர் யோகேஸ்வரன் தெரிவிக்கிறார். ஆனால், கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் ஒவ்வொரு வருடமும் 7 முதல் 8 மாணவர்கள் கல்வியை கைவிட்டுவிட்டு பணிக்குச் செல்கின்றனர் என ஆசிரியர் சற்சொரூபன் கூறுகிறார்.

வடக்கு மாகாணத்தில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவது தொடர்பில் ஓரளவான விழிப்புணர்வு பெற்றோரிடையே உள்ள போதிலும் மத்திய மாகாணத்தில் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. மத்திய மாகாணத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஓர், இரு ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ளதால் கொழும்பு உட்பட நாட்டின் பிரபாகங்களில் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவது கணிமான அளவு அதிகரித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தொழிலுக்குச் செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

“2019ஆம் ஆண்டின் பின்னர் நாடு முகங்கொடுத்துவரும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாத நிலைக்கு அனைத்து மக்களும் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே வருமானம் குறைவாக உள்ள தொழிலாளர்களுக்கு இதன் தாக்கம் கடும் சுமையாக மாறியுள்ளது. அதனால் மூன்று, நான்கு பிள்ளைகள் உள்ள குடும்பங்கள் ஒருவர், இரு பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தி அவர்களை தொழிலுக்கு அமர்த்துகின்றன”- என நுவரெலியா மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஹரேந்திரன் குறிப்பிட்டார்.

இலங்கை எதிர்கொண்டுவரும் மோசமான பொருளாதார சூழலால் வைத்தியர்களாகவும், ஆசிரியர்களாகவும் சமூகத்தில் மதிப்புமிக்க ஒரு தொழிலை செய்ய வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்த பலரின் எதிர்பார்ப்புகள் கலைந்து வருகின்றன.

“சிறுவயது முதலே பொலிஸ் அதிகாரியாகி எங்கள் ஊரில் பணியாற்ற வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. சாதாரண தரத்தில் ஆங்கிலப்பாடத்தை தவிர ஏனைய அனைத்து பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றேன். ஆனால், குடும்பத்தின் வறுமைநிலை மோசமடைந்ததால் கொட்டகலையில் ஒரு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இன்றுநான் தொழில்புரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்” – என கலைக்கமல் உருக்கத்துடன் தமது கதையைக் கூறினார்.

கொட்டகலை ட்ரைடன் தோட்டத்தில் இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த கலைக்கமல், தந்தையின் மதுப்பழக்கத்தால் தாயை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தால் தனது கனவுகளை தூக்கியெறிந்துவிட்டு கடையில் பணிப்புரிகிறார்.

இலங்கை பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் மதுபாவனை சதவீதம் குறையவில்லை. மாறாக அதிகரிப்பையே காட்டுவதாக உலக நாடுகளில் மதுபாவனைகள் குறித்து ஆய்வுகளை நடத்தும் றறற.ளவயவளைவய.உழஅ இணையத்தின் தரவுகள்; கூறுகின்றன. 2021ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் மதுபாவனை சதவீதம் தொடர்ச்சியான அதிகரிப்பு போக்கையே இணையத்தின் ஆய்வுகள் காட்டுகின்றன. இலங்கையில் இரண்டாவதாக அதிக மதுபாவனையாளர்கள் மத்திய மாகாணத்திலேயே உள்ளனர். இங்கு 660 மதுபானசாலைகள் உள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 234 மதுபானசாலைகள் உள்ளதுடன் இவை தோட்டங்களை அண்டிய சிறிய நகரங்களிலேயே அமைந்துள்ளன.

குடும்பத் தலைவர்களின் மதுபாவனையால்தான் பெருந்தோட்டப்பகுதிகளில் பல மாணவர்கள் கல்வியை கைவிட்டு ஆடை கடைகளிலும், ஹோட்டல்களிலும், கட்டட நிர்மாண பணிகளிலும் ஈடுபவதை கள ஆய்வுகளில் அவதானிக்க முடிந்தது.

பொருளாதார நெருக்கடியால் கலையும் கவனவுகள்

“எங்கள் ஊரில் பல அண்ணாமார்களும் அக்காமார்களும் ஆசிரியர்களாக பணிப்புரிகின்றனர். அவர்களை போன்று நானும் ஆசிரியராக வேண்டுமென ஆசைப்பட்டேன். ஆனால், தாய் தலைமையிலான என் குடும்பத்தின் வறுமையை போக்கவும் என் இரு சகோதரிகளின் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் அன்றாட கூலிக்காக 16 வயதிலேயே கட்டடம் கட்டும் பணிக்கு வந்துவிட்டேன்” என மஸ்ககெலியா ஸ்டொக்ஹோம் தோட்டத்தை சேர்ந்த செந்தூரனை சந்தித்தபோது கவலையுடன் தெரிவித்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவது கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக கண்டி சமூக அபிவிருத்தி நிலையம் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கணிசமாக இடைவிலகல்கள் அதிகரித்துள்ளன. மத்திய மாகாணத்தின் ஹட்டன் கல்வி வலயத்தில் மாத்திரம் கடந்த 2021ஆம் ஆண்டு 790 மாணவர்கள் இடைவிலகி தொழில்களுக்குச் சென்றுள்ளனர். இது 2022ஆம் ஆண்டில் மேலும் அதிகமாக இருந்திருக்குமென ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட டின்சினன் பாடசாலை அதிபர் பொன் பிரபா கூறியதுடன் தமது பாடசாலையில் கடந்த (2022) ஆண்டு 20 சதவீதமான மாணவர்கள் கல்வியை கைவிட்டு தொழில்களுக்கு சென்றுள்ளனர் என தெரிவித்தார்.

டிக்கோயா நுண்கலை கல்லூரியில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023 மார்ச் மாதம்வரையான காலப்பகுதியில் 39 பேர் குடும்ப வறுமை காரணமாக கல்வியை இடைநிறுத்திவிட்டு கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தொழிலுக்குச் சென்றுள்ளனர் என அதிபர் என்.மூவேந்தன் தெரிவித்தார்.

தலவாக்கலை கிறேட்வெஸ்;டன் பாடசாலையில் 27 மாணவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் நகர்புற கடைகளில் பணிக்குச் சென்றுள்ளதாக பாடசாலை ஆசிரியர் கேதீஸ்வரன் கூறியதுடன், ஹட்டன் கார்பெக்ஸ் கல்லூரியில் 2021, 2022ஆம் ஆண்டுகளில் 20 மாணவர்கள்வரை பாடசாலையிலிருந்து இடைவிலகி தொழிலுக்குச் சென்றுள்ளதாக அதிபர் பரசுராமன் சங்கர் தெரிவித்தார்.

இளம் வயது திருமணங்கள், குடும்பத்தலைவர்களின் போதைப் பாவனை, கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தமை, பாடசாலைகளை அண்டி உருவாகியுள்ள போதைப்பொருள் வலைப்பின்னல், அதிகரித்துள்ள பொருளாதார சுமைகள் உள்ளிட்ட காரணங்களால் சாதாரண தரக் கல்வியைகூட கற்றுக்கொள்ள முடியாது நிலைக்கு இலங்கையில் வறுமையான மற்றும் நலிவடைந்த குடும்பங்களில் வாழும் சிறுவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

“எமது தோட்டத்தில் அண்மையில் நடத்திய ஆய்வில், தாய்மார்கள் வெளிநாடு செல்லும் நிலைமை அதிகரித்துள்ளதால் பிள்ளைகள் கவனிப்பாரற்று சிறுவயதிலேயே தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனால் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்” என ஹட்டன் செல்வகந்தை தோட்டத்தில் இயங்கும் உள்ளூர் அபிவிருத்திக்கான பாராளுமன்றத்தின் உறுப்பினர் சங்கரன் தெரிவிக்கிறார்.

நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தமட்டில் குடும்பத் தலைவர்களின் மதுபாவனை, தாய்மார்கள் பிள்ளைகளைப் பிரிந்து வெளிநாடு செல்வது, அதிகரித்துள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி போன்ற காரணிகளாலேயே அதிகமாக சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றனர் என பரவலான ஆய்வில் அறியமுடிகிறது. நுவரெலியா மாவட்டத்தை ஒத்ததான காரணிகளே பதுளை மாவட்டத்திலும் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதில் தாக்கம் செலுத்துகின்றன………………

கட்டுரையின் தொடர்ச்சி பிரசுரிக்கப்படும்

(கட்டுரை – சு.நிஷாந்தன்)

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.