வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்று(19) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு முன்னாள் சட்ட மா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் பாரிய சதித்திட்டமொன்று காணப்படுவதாக முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா 2021 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற விதம், நேரம், தினம் மற்றும் ஏனைய விடயங்கள் அரச புலனாய்வுச் சேவை எனப்படும் SIS நிறுவனத்திற்கு கிடைத்தமையின் ஊடாக பாரிய சதித்திட்டமொன்று இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கின்றமை வௌிப்படுவதாக அவர் கூறியிருந்தார்.
இந்த பாரிய சதித்திட்டத்துடன் தொடர்புடைய அனைவரும் சாட்சியங்களின் ஊடாக வௌிப்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.