Thursday, May 15, 2025

Latest Posts

மருந்து செலுத்திய பின் உடல் நீல நிறமாகி உயிரிழந்த யுவதி

பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட மருந்து மூலம் தனது மகள் உயிரிழந்து விட்டதாக தாய் ஒருவர் கூறியுள்ளார்.

21 வயதான சாமோதி சந்தீபனி அஜீரணக் கோளா காரணமாக அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அங்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் போது மகளின் நிலை மோசமடைந்து உடல் நீல நிறமாக மாறியதாக சாமோதியின் தாய் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எனது மகள் வயிற்று வலி காரணமாக கொட்டாலிகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 10ஆம் திகதி பேராதனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன்பிறகு அவர் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து 17ஆம் இலக்க வார்டிற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து சேலைன் ஏற்றப்பட்டது.

அத்துடன் இரு மருந்துகள் ஏற்றப்பட்டன. அந்த மருந்துகளை ஏற்றும் போதே எனது மகள் ஏதோ நடப்பதாக கூறினாள். இதன்பின்னர் அவரின் கை, கால்கள் எல்லாம் நீல நிறமாக மாறிய நிலையில் அவர் அப்படியே விழுந்து விட்டாள். இன்று என் பிள்ளை உயிருடன் இல்லை. எனக்கு இருந்தது ஒரேயொரு பெண் பிள்ளை. அவருக்கு வேறு எந்த நோய்களும் இருக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பேராதனை வைத்தியசாலை மற்றும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கண்டி வைத்தியசாலையில் பூஞ்சை தொற்றுக் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படும் ஏழு மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நோயாளிகளுக்கு பெரிட்டோனியல் டயாலிசிஸ் தீர்வுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது 2026 வரை தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகும்.

எனினும் சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அசேல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

பெரிட்டோனியல் டயாலிசிஸ் என்பது இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை அகற்றுவதற்கான ஒரு வழியாகும். அத்துடன் அது, சிறுநீரக செயலிழப்பிற்கான சிகிச்சையும் ஆகும் என அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.