கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு எதிராக கோரிக்கை முன்வைத்து அதனை உடனடியாக அமுல்படுத்துமாறு அமைச்சர் நசீர் அஹமட் தொடர் அழுத்தம் கொடுத்ததாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்ததன் பின்னர் காத்தான்குடி வலய கல்விப் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
காத்தான்குடி வலய கல்விப் பணிப்பாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்ட நிலையில் அதற்கு அலாவுதீன் என்பவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அந்த பதவிக்கேற்ற தரத்தில் உள்ள புதியவரை நியமிக்க நடவடிக்கை எடுத்த போது தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளவரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என அமைச்சர் நசீர் அஹமட் தொலைபேசி ஊடாக தனக்கு அழுத்தம் கொடுத்ததாக கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் ஆளுநரின் பணிப்புக்கு அமைய புதியவரை நியமிக்க நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.