மரக்கறிகளின் விலைகள் வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு

0
179

நாட்டின் பல பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற தொடர் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார நிலையத்தின் ஆலோசகருமான அருண சாந்த ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில்,

வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்போதைய மரக்கறிகளின் விலை உயர்ந்துள்ளது என்று குறிப்பிடலாம். அதற்கமைய கோவா ஒரு கிலோகிராம் 470 முதல் 490 ரூபா வரையிலும், கரட் ஒரு கிலோகிராம் 660 முதல் 680 ரூபா வரையிலும், பீட்ரூட் ஒரு கிலோகிராம் 350 முதல் 370 ரூபா வரையிலும், தக்காளி ஒரு கிலோகிராம் 400 முதல் 450 ரூபா வரையிலும், போஞ்சி ஒரு கிலோகிராம் 600 முதல் 650 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், இவ்வாறு இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மரக்கறிகளின் விலை அதிகளவிற்கு அதிகரித்த போதிலும் விவசாயிகளுக்கு எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை. காய்கறிகளின் விலை உயர்ந்தாலும், கடந்த காலம் முழுவதும் பெய்த கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் நாசமடைந்துள்ளன.

கடந்த ஆண்டுகளில் இந்த பருவத்தில் 100 கிலோ காய்கறிகளை சேமித்த விவசாயிகள், இந்த ஆண்டு பத்து கிலோ காய்கறிகளை மட்டுமே சேமித்துள்ளனர். 2023ஆம் ஆண்டைப் போல இல்லாமல் பிறந்திருக்கு 2024ஆம் ஆண்டை முறையான திட்டத்தின்படி செயல்படுத்த வேண்டும் விவசாயிகள் நலன் கருதி அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். அதேநேரம் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருவதாகவும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த நிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி காணப்பட்டிருக்கும் ஆனால். இந்த வருடத்தில் இவ்வாறு மரக்கறி வகைகள் விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here