Thursday, January 16, 2025

Latest Posts

ஏனைய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படாத நிலையை உருவாக்குவோம்

நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் வலுப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இந்த வருட இறுதிக்குள் இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி,

ஸ்திரமான பொருளாதாரத்தை உருவாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையின்படி, போட்டித்தன்மை வாய்ந்த புதிய சந்தைகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு இலங்கையின் பொருளாதாரத்திற்கு நேரடியாகப் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.

அதன் வரலாற்று சிறப்புமிக்க முன்னெடுப்பாக, அண்மையில் தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை தற்போது இருபத்தி இரண்டு கோடி நபர்களுள்ள சந்தைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதைக் கண்டுகொள்ளலாம்.

ஆனால் உலகில் பாரிய அளவில் சந்தை வாய்ப்புகள் உள்ளன. அபிவிருத்தி அடைந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் அந்தப் பாரிய சந்தை வாய்ப்புகளை சிறப்பாகக் கையாள்வதன் மூலம் தங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளன. வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இன்று உலகின் பாரிய சந்தைகளுடன் சுதந்திர பொருளாதார

ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை அடைந்துள்ளன. இதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.

1991 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் சுமார் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. அதே காலகட்டத்தில் பங்களாதேஷ் மற்றும் வியட்நாமும் இதே பெறுமதியில் இருந்தன. ஆனால் 2022 இல் வியட்நாமின் ஏற்றுமதி வருமானம் 373 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாறியுள்ளது. இவை அனைத்துக்கும் அவர்கள் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தியமை தான் பிரதான காரணமாகும்.

ஆசிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டு இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நீண்ட கால வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளார். அது வெற்றியடையும் பட்சத்தில் இலங்கைக்கு வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

அண்மையில் தாய்லாந்துப் பிரதமருடன் இந்நாட்டுக்கு வருகை தந்திருந்த தூதுக்குழுவினர் இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் மாத்திரமன்றி பல முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலம் ஒருபுறம் ஏற்றுமதி வலுவடையும் அதே வேளையில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் காரணமாக, மீன்பிடி, சுற்றுலா, விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆகியவற்றில் இலங்கை பெருமளவிலான முதலீடுகளைப் பெறும் வாய்ப்பும் எற்பட்டுள்ளது.

தொழில்நுட்ப சேவைகளை வழங்கவும் தாய்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா, சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தவும் எதிர்பார்க்ப்படுகின்றது. அதன்மூலம், இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, வளமான இலங்கையை உருவாக்குவதற்கான முதல் அடியை எடுக்கவும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளின் பாரிய சந்தைகளுடன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு இலங்கையின் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பும் உள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன,அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.