“இலங்கை தமிழரசுக்கட்சியில் யாப்பு மீறல்கள் இருக்குமாக இருந்தால் அதனை நிவர்த்தி செய்து நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்லலாம் ” என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலரை நேற்று (16) இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்துள்ளார். குறித்த கலந்துரையாடலுக்கு பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் இருக்கின்ற விடயங்கள் சரியாக பின்பற்றப்படவில்லை என நீதிமன்றில் சுட்டிக்காட்டப்படுமாக இருந்தால் பொறுப்பான அரசியல் கட்சியாக அதனைத் திருத்தி யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை.
இங்கு இருக்கக்கூடிய விசேட பிரச்சினைகள் குறித்து இந்திய தூதருடன் கலந்துரையாடி இருக்கின்றோம். இந்திய கடற்தொழிலாளர் பிரச்சினை சம்பந்தமாக அவரிடம் குறிப்பிட்டிருந்தேன்.
அது பற்றி நான், இந்தியப் பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் ஒன்று எழுதியுள்ள நிலையில் இது விரைவிலே தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளதாக இந்தியத் தூதுவர் கூறினார்.
எனினும், வடக்கில் இருக்கக்கூடிய சீன கடலட்டைப் பண்ணைகள் மூலம் கடற்தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படுகின்றது. இதனைப் பற்றி யாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது கவலையளிப்பதாக தூதுவர் தெரிவித்தார்.
மேலும், எங்களுடைய கடற்றொழிலாளர்கள் கடலிலே தங்கள் தொழிலை செய்ய முடியாத அளவுக்குக் கடற்படுக்கைகள் சீனாவின் கடலட்டைப் பண்ணைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்பதனை அவருக்கு நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.
இந்நிலையில், “இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய தேசிய மாநாட்டுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நீதிமன்றங்கள் தடை விதித்திருக்கின்றன. இது தொடர்பில் கட்சியின் ஊடகப் பேச்சாளர் என்ற வகையில் உங்கள் கருத்து என்ன?” என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுமந்திரன்,
“யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தால் எங்களுடைய நிர்வாகச் செயலாளருக்குக் கொடுக்கப்பட்ட ஆவணத்தைப் பார்வையிட்டிருந்தேன். திருகோணமலை நீதிமன்ற ஆவணம் இன்னும் யாரிடமும் சேர்க்கப்படவில்லை. எனினும், கட்சி யாப்பிலே இருக்கின்ற சில சரத்துக்கள் மீறப்பட்டுள்ளன எனக் குற்றம் சுமத்தியே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாப்பு மீறல்கள்
அவ்வாறான யாப்பு மீறல்கள் இருக்குமாக இருந்தால் அதனை நிவர்த்தி செய்து நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்லலாம் என்பதே என்னுடைய கருத்து. ஏனென்றால் ஒரு கட்சியினுடைய நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவது அல்லது முறைப்படுத்துவது அந்தக் கட்சியினுடைய யாப்பு மட்டுமே. நாங்கள் பல தடவைகளிலே சில விடயங்களைக் கவனிப்பதில்லை.
அப்படி கவனிக்காமல் இருக்கின்ற போது அது பழக்கமாக வந்துவிடும். ஆனால், யாராவது அதைச் சவாலுக்கு உட்படுத்தினால்தான் அந்தப் பிரச்சினை வெளிப்படும். ஆகவே, யாப்பில் இருக்கின்ற விடயங்கள் சரியாகப் பின்பற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுமாக இருந்தால் பொறுப்பான அரசியல் கட்சியாக அதனைத் திருத்தி யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை என்று நான் கருதுகின்றேன்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ‘வழக்குத் தொடர்பிலே தமிழரசுக் கட்சியினுடைய முன்னாள் தலைவர்கள், இந்நாள் தலைவர்கள் யாரேனும் உங்களுடன் கலந்துரையாடி இருக்கின்றார்களா?’ என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”யாரும் என்னுடன் இந்த வழக்குச் சம்பந்தமாக கலந்துரையாடவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.