யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்களின் ஒரு வருட சேவை நீடிப்பு அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கடந்த 12 ஆம் திகதியுடன் ஓய்வுபெற்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்துக்கான அரச அதிபர் பதவி வெற்றிடமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாதசுந்தரன் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி ஓய்வுபெற்றுச் செல்லவுள்ளார்.
இவ்வாறு ஓய்வுநிலைக்குச் சென்றுள்ள இரு அரச அதிபர்களுக்கும் மேலும் ஒரு வருடம் சேவை நீடிப்பு வழங்கவே அமைச்சரவைக்குப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சேவை நீடிப்பை வழங்கும் பட்சத்தில் பாதிக்கப்படும் அரச உத்தியோகத்தரால் எவராவது ஒருவர் நீதிமன்றத்தை நாடினால் அதனை எதிர்கொள்வது கடினம என்று சுட்டிக் காட்டப்பட்டதன் அடிப்படையில் சேவை நீடிப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனவரி 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்த வேளையில் இரு அரச அதிபர்களும் அமைச்சர் ஒருவரின் சிபார்சுடன் சேவை நீடிப்பு கோரிக்கை சமர்ப்பித்தனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்திருந்தது.
இதேவேளை, கடந்த 12 ஆம் திகதி ஓய்வுபெற்றுச் சென்ற கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் இன்று வரை தனது உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் வதிவிடம் என்பவற்றை மீளக் கையளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.