Wednesday, January 15, 2025

Latest Posts

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: எலும்புக்கூடுகள் எக்காலத்திற்குரியது?

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எந்தக் காலத்திற்குரியது என்ற விடயம் தெரியவந்துள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகூடுகள் 1994-1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தின்போது இறந்தவர்களுடையதாக இருக்கலாமென நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி, வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ தெரிவிக்கின்றார்.

“அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இடைக்கால அறிக்கையின் படி 40 உடலங்கள் முற்றுமுழுதாக ஆராயப்பட்டுள்ளன. தொல்பொருளியல் குழுவினரால் அவர்களின் முடிவுகளின் பிரகாரம். இந்த உடலங்கள் சமயாசார முறைப்படியல்லாமல், மிக அவசரமாக புதைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 1994-1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற யுத்தத்தின்போது, இறந்தபோது புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.”

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான வழக்கு இன்று (22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புகள் உள்ளிட்ட பிற பொருட்கள் தொடர்பான ஆய்வு குறித்த, இடைக்கால அறிக்கை, பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் இன்று நீதிமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கமைய எலும்புக்கூடுகள் எந்தக் காலப்பகுதிக்குரியது என்ற விடயத்தை நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் மன்றில் அறிவித்ததாக, சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் உடற்பாகங்கள் குறித்த ஆய்வுப் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும், அதற்கான நிதி இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும், சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவளை, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அடுத்தக்கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படலாம் என எதிர்வுகூறியுள்ள சட்டத்தரணி வி. கே. நிரஞ்சன் அதற்கான நிதி இன்னமும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கவில்லை எனவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் பாரிய மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி நவம்பர் 29ஆம் திகதி ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு நிறுத்தப்பட்ட போது புதைகுழியில் இருந்து குறைந்தது 40 பேரின் எச்சங்கங் மீட்கப்பட்டன.

அந்த சடலங்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படுவதற்கும் சில சான்றுகளும் காணப்படுகின்றன.

அகழ்வுப் பணிகள் நிறைவடைந்ததையடுத்துமேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பான முதற்கட்ட அறிக்கையை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்திருந்தார்.

கடந்த வருடம் டிசம்பர் 14ஆம் திகதி, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்த வழக்கு குறித்த கலந்துரையாடலின்போதே ராஜ் சோமதேவ இவ்வாறு தெரிவித்திருந்தார்.

எனினும் ஆய்வுப் பணிகள் நிறைடையாத நிலையில் இன்றைய தினம் (22) குறித்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.