Sunday, November 24, 2024

Latest Posts

மேய்ச்சல் தரையை மீட்கும் தமிழ் பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்கிறது

ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாற்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பான்மையின சிங்கள விவசாயிகள் தமது கால்நடைகளை தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதோடு கொலை செய்வதாக, தொடர்ச்சியாக 160 நாட்களைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, மயிலத்தமடு, மாதவனை தமிழ் பால் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

“அதிகூடிய மின்சாரத்தைக் கொடுத்து குறைமாதத்தில் கன்றை ஈன்றுள்ளது. குறை மாதத்தில் பிறந்த கன்றால் எழும்பிகூட நிற்க முடியவில்லை. இந்த கன்று குட்டி. இது அநியாயம்தானே? இது வாய்பேச முடியாத மிருகம் தானே இது? இது மின்சாரக் கம்பியா? இல்லையா என இதுக்கு தெரியுமா? பௌத்த தர்மத்தை மதிக்கும் அனைவரும் பாருங்கள். வாய்பேச முடியாத ஜீவன்களுக்கு இவ்வாறு செய்கிறீர்கள்? சுடுகிறீர்கள். வாய் வெடியை  போடுகிறீர்கள். கட்டுத் துப்பாக்கியை  கட்டுகிறீர்கள். வெட்டுகிறீர்கள். நீங்களா, பௌத்த தர்மத்தை மதிப்பவர்கள்?” என கால் பண்ணையாளர் ஒருவர் கவலை வெளியிடுகின்றார்.

மயிலத்தமடு, மாதவணையில் மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகளை அகற்றுமாறு தமிழ் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக கோரிக் விடுத்து வருகின்றனர்.

கடந்த வருடம் செப்டெம்பர் 13ஆம் திகதி, மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது என மாவட்டத்தின் அப்போதைய  செயலாளர் கமலாவதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து, செப்டெம்பர் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக தமிழ் பாற்பண்ணையாளர்கள் முதன் முதலாக ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தம்மை சந்திப்பதாக நேற்று (பெப்ரவரி 25) தெரிவித்த, மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தம்மை சந்திக்கவில்லை என  மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.

அத்துமீறி மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகள், போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் இதுவரை 275 மாடுகளை கொலை செய்துள்ளதாகவும் இதுத் தொடர்பில் கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதிலும் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் சீனிதம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.

குறித்த 275 மாடுகளும் 22 பண்ணையாளர்களுக்கு சொந்தமானதென அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

மேய்ச்சல் தரையை கைப்பற்றியுள்ள சிங்கள விவசாயிகள் சிறிய குளங்கள் மற்றும் ஆறுகளையும் ஆக்கிரமித்துள்ளமையால் மாடுகளின் தாகத்தைத் தீர்க்க வழியின்றி பண்ணையாளர்கள் தடுமாறுவதாக அவர் வலியுறுத்துகின்றார்.

சுமார் 6,500 ஏக்கர்களைக் கொண்ட குறித்த மேய்ச்சல் தரை காணியில் 5,000 ஏக்கர் வரையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயப் பணியில் ஈடுபடுவதற்கென அந்த பிரதேசத்தில் சுமார் 700 பேர் வரையில் தங்கியிருப்பதாகவும்  பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டுகின்றார்.

தனக்கு சொந்தமான 50 மாடுகளில், 15 மாடுகளை விவசாயிகள் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கும் பண்ணையாளர் ஒருவர், தமது வாழ்வதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

“காலங்காலமாக மாடுகள் கொண்டுவந்து கட்டும் இடம். இவர்கள் அத்துமீறி குடியேறியமைால் எங்கள் மாடுகளை கட்ட முடியாமல் உள்ளது. வெட்டுவதும், சுடுவதும், இதோடு வெட்டிடி போட்டுள்ளார்கள். இதோடு 15 மாடுகள். என்னுடைய  50 பதிவு செய்து,  15 மாடுகள் இவ்வாறு கிடக்கின்றன. இதற்கு அரசாங்கம்தான் பொறுப்புக்கூற வேண்டும். எங்களுக்கு ஒரு ஆதாரமும் இல்லை. மாடுதான் எங்களின் வாழ்வாதாரம். இவர்கள் வந்ததால்தான் இந்த அழிவு கூட.”

மயிலத்தமடு, மாதவணையில் மேய்ச்சல் தரையை நம்பி 982 பால் பண்ணையாளர்களுக்குச் சொந்தமான சுமார் இரண்டு இலட்சம் மாடுகள் காணப்படுவதோடு, இந்த மாடுகளை தமது வாழ்வாதாரமாக நம்பி சுமார் 3,000 குடும்பங்கள் வாழ்கின்றன.

இவர்கள் அனைவரது வாழ்வதாரமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.