திறந்த விசா ஊடாக வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை தேடிச் செல்ல வேண்டாம் எனவும் சிங்களம் பேச தெரியாத தமிழ் மொழி பேசுபவர்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இடைத்தரகர்களின் போலியான வாக்குறுதிகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
மியன்மார் சைபர் கிரைம் பயங்கரவாத குழுவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மியன்மார் சைபர் கிரைம் பகுதியில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இதில் 56 இலங்கையர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று ஒரு தரப்பினர் அங்கு நெருக்கடிக்குள்ளான நிலையில் பிறிதொரு தரப்பினர் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்கிறார்கள். அண்மையில் மூன்று இலங்கையர்கள் டுபாய் சென்று அங்கிருந்து பேங்கொக் சென்று தரை வழியாக தாய்லாந்து செல்ல முயற்சித்துள்ளார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் தான் வெளிநாட்டு தொழில் இடைத்தரகர்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே திறந்த விசா முறைமை ஊடாக வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக செல்வதை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.