தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலைமை காரணமாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும். சீரற்ற காலநிலை மற்றும் அதனால் ஏற்பட்ட திடீர் விபத்துக்களினால் இதுவரை 7 பேர் (நேற்று மாலை வரை) உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
மரம் முறிந்து விழல், வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட பாதிப்புக்களினால் நாடளாவிய ரீதியில் 12,197 குடும்பங்களும் 45,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 2,797 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கண்காணிப்பில் 188 நபர்கள் பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மழை தொடரும்
தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும். மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ அதிகமாக மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்
காற்று மற்றும் கடல் நிலை
மன்னார் முதல் கற்பிட்டி, கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புக்கு மேலான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் அதிகரிப்பதுடன் அந்த கடற்பிரதேசம் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.
ஆகவே, இந்த கடல் பிரதேசத்துக்குள் மறு அறிவித்தல் விடுக்கும் வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், படகுகளில் செல்வதையும் மீனவர்களும் கடற்படையினரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
தீவினை அண்மித்துள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.
மன்னார் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்கரைக்கு மேலான கடற்பிரதேசத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மன்னார் தொடக்கம் கற்பிட்டி, கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு மேலான கடல் பிரதேசத்தில் கடல் அலை 2.5 – 3.0 மீற்றர் வரை உயர்வடையக்கூடும்.
இதனால் மன்னார் தொடக்கம் கற்பிட்டி, கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான பிரதேசத்தில் கடலலை உள்நுழையும். ஆகவே காலநிலை தொடர்பில் விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள் குறித்து மீனவர்கள் மற்றும் கடற்றொழிலுடன் தொடர்புடையவர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
உயிரிழப்பு மற்றும் வீடுகள் சேதம்
சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற விபத்துக்களில் இதுவரை (நேற்று மாலை) 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 12,197 குடும்பங்களும் 45344 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 2797 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இதற்கமைய 188 நபர்கள் பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் சீரற்ற காலநிலையால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை
24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 75 மி.மீற்றர்களை மேவியுள்ளதால் (அதிகரித்துள்ளதால்) மழை தொடருமாயின் மண்சரிவு, சாய்வு இடிந்து விழுகை, பாறை விழுகை, நிலவெட்டு சாய்வு இடிந்து விழுகை மற்றும் தரை உள்ளிறக்கம் என்பவற்றுக்கான சாத்தியம் காணப்படுகிறது.
செம்மஞ்சள் எச்சரிக்கை
24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 100 மி.மீற்றர்களை மேவியுள்ளதனால் (அதிகரித்துள்ளதால்) மழை தொடருமாயின் மண்சரிவு, சாய்வு இடிந்து விழுகை, பாறை – விழுகை மற்றும் தரை – உள்ளிறக்கம் என்பவற்றுக்கான சாத்தியம் காணப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
கடலுக்கு செல்ல வேண்டாம்
கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 -70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அக்கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆகவே, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகத்தினரும் கொழும்பிலிருந்து காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.