இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வழக்கில் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் உட்பட 4 எதிராளிகள் இன்று தமது பதில் மனுக்களைத் தாக்கல் செய்வர் என முன்னாயத்தக் கூட்டத்தில் உறுதி அளித்த போதிலும் அதை அவர்களின் சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அதனால் வழக்கு மேலும் 11 தினங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
இதேசமயம் வழக்கில் இடையீட்டு எதிராளியாகத் தன்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பித்துள்ள சிறீதரன் தரப்பு ஆதரவாளரான – கிளிநொச்சியைச் சேர்ந்த ஜீவராஜா என்பவர் தமது விண்ணப்பத்தில் விடாப்பிடியாக உறுதியாக நின்றமையால், அது தொடர்பான எழுத்து மூல ஆட்சேபனைகளைப் பிற எதிராளிகள் சமர்ப்பிப்பதற்கு ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.
இந்த இரண்டு விடயங்களிலும் முடிவு எட்டப்பட்ட பின்னரே வழக்கு அடுத்த கட்டத்துக்கு நகரும் என்றும், அதுவரை இழுபறி நிலைமை தொடரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வழக்குத் தொடர்பாக மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், சண்முகம் குகதாசன், சீனித்தம்பி யோகேஸ்வரன் தவிர்ந்த ஏனைய நான்கு எதிராளிகளான சுமந்திரன், குலநாயகம், சத்தியலிங்கம், இரத்தினவடிவேல் ஆகியோர் சார்பிலான பதில் மனுக்கள் இன்று நீதிமன்றத்தில் சட்டத்தரணி சுமந்திரனினாலும் அவர்களின் பிற சட்டத்தரணிகளினாலும் சமர்ப்பிக்கப்பட்டன.
தங்களின் பதில் மனுவின் பிரதிகளைக் கடந்த 11ஆம் திகதி மற்றைய எதிராளிகளின் சட்டத்தரணியான புவிதரனிடம் தாம் நேரில் கையளித்தார் என்ற தகவலை இன்று நீதிமன்றத்தில் சுமந்திரன் தெரியப்படுத்தினார்.
அதன் பின்னர் கடந்த 14ஆம் திகதி வழக்குத் தொடர்பான எதிராளிகளின் கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது என்றும், எல்லா எதிராளிகளினாலும் ஒரே விதமான பதிலைச் சமர்ப்பிக்க முடியாவிட்டாலும் அவரவர்களின் பதில் மனுக்கள் இன்று 19ஆம் திகதி நீதிமன்றத்தில் அணைக்கப்படும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும் சுட்டிக்காட்டிய எம்.ஏ. சுமந்திரன், அதற்கு மாறாக இப்போது இங்கு வந்து மேலும் கால அவகாசம் கோருவது காலத்தை இழுத்தடிக்கும் வேலை என்றும் மன்றுக்குத் தெரிவித்தார்.
இதனையடுத்து எதிர்வரும் 30ஆம் திகதி ஏனைய 4 எதிராளிகளும் பதில் தாக்கல் செய்வதற்குக் கால அவகாசம் வழங்கி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்தப் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, எதிராளியாகச் சேர விண்ணப்பித்துள்ள ஜீவராஜாவின் இடையீட்டு மனுத் தொடர்பான விடயமும் தீர்மானிக்கப்பட்ட பின்னரே, இனி இந்த வழக்கு அடுத்த கட்டமான ‘விளக்கத்துக்கு முன்னரான கலந்தாய்வுக்கு’ திகதி தீர்மானிக்கும் விடயத்துக்கு முன்நகரும் எனத் தெரிகின்றது.