Friday, September 20, 2024

Latest Posts

ரணில் வெற்றி பெற்றால் தான் இந்நாடு இருக்கும் – ராமேஷ்வரன்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றால்தான் இந்நாடு இருக்கும். மக்களுக்கு நிம்மதியாக வாழ்க்கூடிய பொருளாதார சூழ்நிலை இருக்கும். எனவே, செப்டம்பர் 21 ஆம் திகதி ‘கேஸ் சிலிண்டர்’ சின்னத்துக்கு வாக்களித்து ஜனாதிபதிக்கு ஆணை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, பூண்டுலோயா நகர மைதானத்தில் நேற்று மாபெரும் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல், பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இது உள்ளாட்சிமன்ற தேர்தலோ அல்லது மாகாணசபைத் தேர்தலோ அல்ல. நாட்டின் தலைவிதியையே தீர்மானிக்கப்போகின்ற தேர்தலாகும். நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலம் நீங்கள் வழங்கும் வாக்குகளில்தான் தங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஆளும் அதிகாரத்தை வழங்கினால் நாட்டுக்கு நல்லது. அவ்வாறு இல்லையேல் நாடும், நாமும் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்பது கசப்பான உண்மையாகும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு நீங்கள் ஆணை வழங்கி இருந்தீர்கள். கோட்டாபய ராஜபக்ச ஆட்சிகாலத்தில் கொரோனா, பொருளாதார நெருக்கடி என பல பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டது. நாமும் சுயாதீனமாக இயங்கினோம். ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்ட பின்னர் எமது பொதுச்செயலாளருக்கு மிக முக்கிய அமைச்சு பதவியை வழங்கினார். குறுகிய காலப்பகுதிக்குள் நாம் பல சேவைகளை மக்களுக்கு செய்துள்ளோம்.

எமது மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டுக்காக உதவி ஆசிரியர் நியமனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அஸ்வெசும வேலைத்திட்டத்துக்குள் மலையக பெருந்தோட்டப்பகுதிகளும் முழுமையாக உள்வாங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, எமது தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 350 ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்குரிய கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றது. அது கிடைத்த பிறகு தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 700 ரூபா நிச்சயம் கிடைக்கும்.

ஜனாதிபதி தேர்தல் சமரில் ரணில் விக்கிரமசிங்கவே முன்னிலையில் உள்ளார். நுவரெலியா மாவட்டத்திலும் அவரின் வெற்றி உறுதி. நுவரெலியாவில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தின்மூலம் இது தெளிவானது. காங்கிரஸ் தனது முடிவை 15 ஆம் திகதி மாற்றும் என்றார்கள், ஆனால் நாம் அவ்வாறு எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஜனாதிபதியின் வெற்றிக்காக முழுமையாக உழைத்துவருகின்றோம். மக்களும் எமது பக்கமே நிற்கின்றனர். எனவே, செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குங்கள்.” – என்றார்.

(க.கிஷாந்தன்)

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.