Tuesday, November 26, 2024

Latest Posts

இந்திய, சீன தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்திய மற்றும் சீன தூதுவர்கள் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

சீன தூதுவர் கீ.ஷென்ஹொங், ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து தேர்தல் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்து தெரிவித்தார்.

இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும், சீனா அரசாங்கத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார்.

இலங்கைக்குள் தற்போது ஒத்துழைப்பு அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்காக சீன அபிவிருத்தி வங்கி (CDB) மற்றும் EXIM வங்கியின் செயற்திறனான தலையீடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கு ஒத்துழைக்கும் வகையில் பிரதான வர்த்தக கடன் வழங்குநர் மற்றும் இரு தரப்பு கடன் வழங்குநர் என்ற வகையில், கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் சீன தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்

இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சகல வழிகளிலும் ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும், பிராந்தியத்தில் அமைதியான மற்றும் நிலையான நாடாக இலங்கை வெளிப்படுவதை காண்பதே தமது நாட்டின் எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கத்தையும் நினைவுகூர்ந்த இந்திய உயர்ஸ்தானிகர், அண்டைய சகோதர நாடுகள் என்றவகையில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியான மற்றும் நிலையான நட்பைப் பேணி முன்னேறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஊழலுக்கு எதிராக திறம்பட போராடுவதற்கு அரசாங்க கட்டமைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்திய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு திட்டத்தையும் பாராட்டினார்.

மேலும், டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.