Thursday, December 5, 2024

Latest Posts

மாவீரர் தினம் அமைதியாக அனுஷ்டிப்பு – பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை ; பாதுகாப்பு அமைச்சின் செயலர் தெரிவிப்பு

“மாவீரர் தினமன்று வடக்கு, கிழக்கு மக்கள் அமைதியான முறையில் தமது அன்புக்குரியவர்களை நினைவேந்தினார்கள். அதனால் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை.”-

இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ்.துய்யகொந்த தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் கடந்த நவம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை அடுத்து அநுரகுமார அரசு இந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு அளித்துள்ள சுதந்திரம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்று தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் சிலர்  தீவிரமான கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் போரின்போதும், அசாதரண சூழல்களின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர முடியும். அதற்கு நாங்கள் தடைகளை ஏற்படுத்தப்போவதில்லை என்பதை முற்கூட்டியே அறிவித்திருந்தோம்.அந்தவகையில் கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினமன்று வடக்கு, கிழக்கு மக்கள் அமைதியான முறையில் தமது அன்புக்குரியவர்களை நினைவேந்தினார்கள்.

அதனால் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை. ஆனால், தென்னிலங்கையில் அந்த விடயங்களை வெவ்வேறு அரசியல் சுய இலாபத்துக்காகச் சிலர் பயன்படுத்த முனைகின்றனர் என்பதை அதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.உண்மையில் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். தமது அரசியல் மீள்பிரவேசத்துக்காக வழக்கம் போலவே இனவாதத்தைத் திணிக்கப் பார்க்கின்றார்கள்.

ஆனால், அவர்களின் நோக்கங்களை மக்கள் அறிவார்கள்.அநுரகுமார தலைமையிலான அரசுக்கு வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவர்கள் மாற்றத்தை எதிர்பார்கின்றார்கள். அதற்கான செயற்பாடுகளை அரசு முன்னெடுக்கும்.வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் இனவாதம், மதவாதம் தோல்வி கண்டுவிட்டது. மீண்டும் அதற்கு இடமளிப்பதன் ஊடாக நாட்டுக்கு எதிர்மறையான நிலைமைகளே ஏற்படும். ஆகவே, மக்கள் அத்தகையவர்களுக்கு இடமளிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

தற்போதைய நிலையில் தேசிய பாதுகாப்பு உயர்ந்த நிலையில் உள்ளது. அதற்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவிதமான நடவக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.தென்னிலங்கையில் உள்ள கடும்போக்காளர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைத்   தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தவே போலிப் பிரசாரம் செய்கின்றார்கள்.

இது உண்மையில் தேசிய நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். அதற்கு ஒருபோதும் மக்கள் இடமளிக்கக்கூடாது.அதேவேளை, வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த தின நிகழ்வு மற்றும் மாவீரர் தின நிகழ்வை வைத்து பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் சிலர் செயற்பட்டுள்ளார்கள். அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு எதிராக உரிய சட்டங்களின் அடிப்படையில் விசாரணைகள், கைதுகள் முன்னெடுக்கப்படுகின்றன.” – என்றார்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.