குருக்கள்மடம் கிராமத்தில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமென, நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நேற்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவர்களை அடக்கம் செய்த இடங்களை அகழ்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகுமெனத் தெரிவித்த அவர், நடைமுறையிலுள்ள சட்டத்தை பின்பற்றி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவர்களது உடலங்கள் அகழப்பட்டு சமய முறைப்படி கௌரவமாக இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/ 2 ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான எம். எல். ஏ.எம் ஹிஸ்புல்லா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கேள்வி எழுப்பிய ஹிஸ்புல்லா எம்.பி: 1990 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் குருக்கள் மடம் கிராமத்தில் புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்று திரும்பிய முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று படுகொலை செய்தனர்.