சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான S&P Global Ratings, இலங்கையின் நீண்ட கால மற்றும் குறுகிய கால அந்நிய செலாவணி இறையாண்மை கடன் மதிப்பீடுகளை ‘SD/SD’ இலிருந்து ‘CCC+/C’ ஆக உயர்த்தியுள்ளது.
இலங்கையின் சர்வதேச கடன் மறுசீரமைப்பு, இறையாண்மை பத்திரங்கள் உட்பட, வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், Fitch Ratings மற்றும் Moody’s போன்ற பிற சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் இலங்கையின் கடன் மதிப்பீட்டை மேம்படுத்தியிருந்த நிலையில், S&P Global Ratings இதனை மேம்படுத்தவில்லை.
இதற்கு முக்கிய காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட சர்வதேச டொலர் பத்திரத்தை மறுசீரமைக்க இலங்கை தவறியதை S&P Global Ratings சுட்டிக்காட்டியுள்ளது.இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 19) வெளியிடப்பட்ட அறிக்கையில், S&P Global Ratings, இலங்கையின் பொருளாதாரம் 2022 நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டு வருவதாகவும், சில முக்கிய பொருளாதார குறிகாட்டிகள் ஏற்கனவே நெருக்கடிக்கு முந்தைய நிலைகளைத் தாண்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அரசாங்க உத்தரவாத பத்திரங்கள் உட்பட மீதமுள்ள நிலுவை வணிகக் கடன்கள் தொடர்பாக இலங்கை கடன் வழங்குநர்களுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இருப்பினும், தற்போதைய சூழலில் இவற்றுக்கு தீர்வு காண்பது சாத்தியமில்லை என S&P Global Ratings நம்புகிறது.
இந்தப் பின்னணியில், இலங்கையின் கடன் தகுதியை சிறப்பாக பிரதிபலிக்கும் வகையில், S&P Global Ratings இலங்கையின் வெளிநாட்டு நாணய இறையாண்மை கடன் மதிப்பீடுகளை ‘SD/SD’ இலிருந்து ‘CCC+/C’ ஆக மேம்படுத்தியுள்ளது. அதேவேளை, உள்ளூர் நாணய மதிப்பீடுகளை ‘CCC+/C’ இல் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.