ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
குறித்த வேன் பிற்பகல் 5.25 மணியளவில் பிலியந்தலை, சுவாரபொல பகுதியில் இருந்து மொரட்டுவ, கட்டுபெத்த ஊடாக சென்று கொண்டிருந்த போது, மேல் மாகாண தெற்கு போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள் வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
எவ்வாறாயினும், அந்த வாகனம் கட்டளையை மீறி முன்னோக்கிச் சென்றுள்ளது, இதன் காரணமாக பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் அதனைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளனர்.
இதன்போது, ரத்மலானை, பெலெக்கடை சந்திப் பகுதியில் வைத்து வாகனத்தின் முன் சக்கரத்திற்கும் பின் சக்கரம் ஒன்றிற்கும் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அப்போதும் வாகனம் நிறுத்தப்படாமல் செலுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ரத்மலானை ரயில் நிலையத்திற்கு முன்பாக வேனின் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது அவர் கீழே விழுந்ததில் வாய் அருகே காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 1990 நோயாளர் காவு வண்டி சேவை மூலம் அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரால் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் போக்குவரத்து வாடகை வாகன சாரதி என்பது தெரியவந்துள்ளது.
இந்த வாகனம் பிலியந்தலையில் இருந்து ரத்மலானை ரயில் நிலையம் வரை பயணிக்கும் போது, வீதியில் பயணித்த பல வாகனங்களையும் விபத்துக்குள்ளாக்கி வந்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்படி வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
