ஆண் மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் பெண் ஆசிரியை ஒருவரிடம் விசாரணை நடத்துமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.
இவ்விடயம் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லொச்சனி அபேவிக்ரமே உத்தரவிட்டார்.
சந்தேகநபர், 16 வயது முதல் 20 வயதுடைய மாணவனை பாலியல் தேவைகளுக்காக அவ்வப்போது பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தகவல் தொழிநுட்ப பாடத்திற்கு ஆசிரியையாக கடமையாற்றும் பெண், பாடசாலை வளாகம் மற்றும் கல்கிசையில் உள்ள ஹோட்டல் உட்பட பல்வேறு இடங்களில் நான்கு வருடங்களாக மாணவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் போது குறித்த பெண் ஆசிரியை மாணவனை சந்தித்ததாகவும், கல்விப் பணிகளுக்கு உதவுகின்றேன் என்ற போர்வையில் தனது தொலைபேசி இலக்கத்தை அவருக்கு கொடுத்துள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் வாட்ஸ்அப் மூலம் சிறுவனுடன் உறவைப் பேணி வந்ததாகவும், மாணவன் 18 வயதை அடையும் வரை அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
குறித்த பெண் ஆசிரியை பாடசாலையை விட்டு விலகியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
விடயங்களை கருத்தில் கொண்ட நீதிமன்றம், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்குமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.