Friday, September 20, 2024

Latest Posts

கொரோனா வைரஸால் ஆண்மை குறைப்பாடு! ஆய்வில் தகவல்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய பின்விளைவுகள் ஏற்படும் என்று உலகம் முழுக்க ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

அதுபோல தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா? என்பது பற்றியும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே கொரோனா காரணமாக வீட்டில் இருந்து பணிபுரிய நேரிட்டதால் அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் மனநலம் தொடர்பாகவும் பல்வேறு விதமான ஆய்வு நடக்கிறது.

இந்த ஆய்வுகளில் மாறுபட்ட கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நேற்று வெளியான ஒரு தகவல் மிகவும் அதிர்ச்சிகரமாக மாறி உள்ளது. அதாவது கொரோனா பாதித்த ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆண்மைத் தன்மை குறைந்து போய் விட்டதாம். இதனால் குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகி விட்டதாக அந்த ஆய்வில் சொல்லப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வை அடிப்படையாக கொண்டு மருத்துவர்களிடம் கருத்து கேட்ட போது அவர்களும் அதை உறுதி செய்தனர். சமீபகாலமாக தம்பதி சகிதமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் இந்த பிரச்சினைக்காகவே வருவதாக சொல்கிறார்கள்.

இதுபற்றி மும்பை டாக்டர் பிரகாஷ் கோத்தாரி கூறுகையில், “கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது கணவன்-மனைவி பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கொரோனா குணம் அடைந்த பிறகும் தாம்பத்ய உறவுகளில் பிரச்சினை ஏற்பட்டது. இது கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவு உருவாகி இருக்கிறது” என்று கூறினார்.

வீட்டில் இருந்து பணி புரிய நேரிட்டதால் அதுவும் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட காரணமாகி விடுகிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்றும் அந்த டாக்டர் தெரிவித்தார்.

பெங்களூரை சேர்ந்த டாக்டர் பத்மினி பிரசாத் கூறுகையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களில் கணிசமானவர்களுக்கு ஆண்மைத் தன்மையில் குறைபாடு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தம்பதிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை தான்” என்றார்.

டாக்டர் சஞ்சய் கூறுகையில், “கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களுக்கு கொரோனா பாதிப்பால் இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது. அது தாம்பத்ய வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்றார்.

தாம்பத்தியம் தொடர்பாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வருபவர்களில் பெரும்பாலான பெண்கள் கொரோனா தாக்கத்துக்கு பிறகு தங்களது இல்லற வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இது தொடர்பான மனநல சிகிச்சைகள் நாடு முழுவதும் அதிகரித்து இருப்பதும் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.