–நலிந்த இந்ததிஸ்ஸ – சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, குறிப்பாக சிறுவர்களுக்கு எதிரான கடுமையான சேதங்கள் ஆன்லைன் தளங்கள் மூலம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த உண்மையை உணர்ந்து, குற்றவாளிகளை தண்டிப்பதோடு மட்டுமல்லாமல், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை உடனடியாக நிறுத்தவும், இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் இடைநிலையர்களின் பொறுப்புகளை நியாயமாக வரையறுக்கவும் சட்டம் ஒரு முழுமையான அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த சட்ட அமைப்பை பிரிவுகள் 21, 24 மற்றும் 27 இணைந்து உருவாக்குகின்றன.
பிரிவு 21 – சிறுவர்களுக்கு எதிரான ஆன்லைன் குற்றங்கள்
பிரிவு 21, சிறுவர்களுக்கு எதிரான ஆன்லைன் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றங்களை உருவாக்குகிறது. இலங்கைக்குள் அல்லது வெளிநாட்டில் இருப்பவராக இருந்தாலும், ஆன்லைன் கணக்கு அல்லது ஆன்லைன் இடத்தை பயன்படுத்தி, தண்டனைச் சட்டத்தின் (Penal Code) குறிப்பிட்ட விதிகளின் கீழ் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்வோரும், அவற்றை உதவுவோரும், தூண்டுவோரும் இந்த பிரிவின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்படுவர்.
இங்கு குற்றவாளி உடல் ரீதியாக எங்கு இருக்கிறார் என்பது பொருத்தமற்றது; இணையம் அல்லது ஆன்லைன் தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதே முக்கியமானது. குற்றத்தை நேரடியாகச் செய்தவர்களுக்கே அல்லாமல், ஆன்லைன் வழியாக அந்த குற்றத்தை எளிதாக்கிய, ஊக்குவித்த அல்லது சாத்தியமாக்கிய அனைவருக்கும் பொறுப்பு விரிவடைகிறது.
மேலும், சிறுவர் தொடர்புடைய துஷ்பிரயோக அல்லது ஆபாச தன்மை கொண்ட புகைப்படங்கள், ஒலி அல்லது காணொளிகளை வெளியிடுவதையும் பிரிவு 21 வெளிப்படையாகக் குற்றமாக்குகிறது. வெளியிடுதல் என்பதில், அவற்றை பதிவேற்றுதல், பகிர்தல், அனுப்புதல் அல்லது எந்த வகையிலும் ஆன்லைனில் கிடைக்கச் செய்தல் அடங்கும். இப்படிப்பட்ட ஒவ்வொரு வெளியீடும் குழந்தைக்கு தொடர்ச்சியான சேதத்தை ஏற்படுத்துவதால், இது கடுமையான குற்றமாகக் கருதப்பட்டு, சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தண்டனைக்கு மேலாக, பாதிக்கப்பட்ட சிறுவருக்கோ அல்லது சிறுவர் குழுவிற்கோ இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிடலாம்; இது பாதுகாப்பும் மீளமைப்பும் அவசியம் என்பதைக் சட்டம் ஏற்றுக் கொள்வதை வெளிப்படுத்துகிறது.
பிரிவு 21 இல் உள்ளடக்கத்தை அகற்றுவது (takedown) குறித்து நேரடியாக குறிப்பிடப்படாதிருந்தாலும், சட்டவிரோத வெளியீடு மற்றும் தொடர்பு என்ற அடிப்படையில் அது அமைந்துள்ளது. தடைசெய்யப்பட்ட உள்ளடக்கம் ஆன்லைனில் தொடர்ந்தும் கிடைக்கும்போது, குற்றமும் சேதமும் தொடர்கின்றன. எனவே, தொடர்ச்சியான பாதிப்பைத் தடுக்க, அந்த உள்ளடக்கத்தை அகற்ற, நீக்க அல்லது மேலும் பரவுவதை நிறுத்த நீதிமன்றங்களுக்கு உத்தரவிட அதிகாரம் உள்ளது.
பிரிவு 24 – உடனடி தடுப்பு நடவடிக்கை
பிரிவு 24, பிரிவு 21 ஐ பூர்த்தி செய்யும் வகையில், விரைவான தடுப்பு நடைமுறையை வழங்குகிறது. தடைசெய்யப்பட்ட ஒரு அறிக்கையின் (prohibited statement) தொடர்பால் பாதிக்கப்பட்ட எந்த நபரும், சத்தியப்பிரமாணத்துடன் (affidavit) மனு மூலம் நீதவான் நீதிமன்றத்தை அணுக முடியும்.
இந்த நடைமுறையின் நோக்கம் தண்டனை அல்ல; தீங்கு விளைவிக்கும் ஆன்லைன் உள்ளடக்கத்தை உடனடியாக நிறுத்துவதே ஆகும். முழுமையான குற்ற விசாரணை அல்லது வழக்கு முடிவடையும் வரை காத்திருக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர நிவாரணம் பெற இது உதவுகிறது.
மனுவை பரிசீலித்த பிறகு, தடைசெய்யப்பட்ட அறிக்கையை பரப்பிய நபருக்கோ, அல்லது அந்த உள்ளடக்கம் வெளிவரும் இணைய சேவை வழங்குநர் அல்லது இடைநிலையருக்கோ, பரவலை நிறுத்துமாறு நீதவான் நிபந்தனை உத்தரவு (conditional order) வழங்கலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி காரணம் காட்டாவிட்டால், உடனடியாக அதனைப் பின்பற்ற வேண்டும்.
இந்த உத்தரவு மின்னஞ்சல், சமூக ஊடக கணக்குகள் அல்லது நேரடியாக சேவை வழங்குநர்கள் மற்றும் இடைநிலையர்களுக்கு வழங்கப்படலாம்; இது மின்னணு யதார்த்தங்களை சட்டம் ஏற்றுக் கொள்வதை காட்டுகிறது.
இரண்டு வாரங்களுக்குள் உத்தரவை பின்பற்றாவிட்டாலோ அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டாலோ, அந்த உத்தரவு இறுதியானதாக மாறி, அது தனியே ஒரு குற்றமாகும். இறுதி உத்தரவை மீறுவது சிறைத்தண்டனை அல்லது அபராதத்திற்குரிய கடுமையான குற்றமாகும். கூடுதலாக, இலங்கையில் அந்த ஆன்லைன் இடத்திற்கான அணுகலைத் தடுக்கவோ அல்லது உள்ளடக்கத்தை அகற்றவோ நீதிமன்றம் உத்தரவிடலாம்.
பிரிவு 27 – இணைய சேவை வழங்குநர்களின் பொறுப்பு
பிரிவு 27, இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் இடைநிலையர்களின் பொறுப்பை குறித்து முக்கியமான மற்றும் நுணுக்கமான விடயத்தை கையாள்கிறது. சேவை வழங்குநர்கள் பெரும்பாலும் நடுநிலையான தளங்களாக அல்லது வழித்தடங்களாக செயல்படுகின்றனர் என்பதைக் கருத்தில் கொண்டு, பயனர்களால் உருவாக்கப்பட்ட சட்டவிரோத உள்ளடக்கத்திற்கு தானாகவே அவர்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை என இந்த பிரிவு அறிவுறுத்துகிறது.
அதன்படி, இணைய இடைநிலைய சேவைகள், தொலைத்தொடர்பு சேவைகள், பொது இணைய அணுகல், கணினி வளங்கள், மின்னஞ்சல், செய்தியனுப்பு சேவைகள் அல்லது ஒருவருக்கொருவர் குரல் தொடர்பு சேவைகள் வழங்குவோர், மூன்றாம் தரப்பினரால் பரப்பப்படும் தடைசெய்யப்பட்ட அறிக்கைகளுக்கு பொதுவாக பொறுப்பற்றவர்களாகக் கருதப்படுவர்.
ஆனால் இந்த பாதுகாப்பு முழுமையானதல்ல. சேவை வழங்குநர் தகவல் தொடர்பைத் தொடங்கினால், பெறுநரைத் தேர்ந்தெடுத்தால், உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுத்தோ மாற்றியோ இருந்தால், அல்லது சட்டம், விதிமுறைகள், ஒழுங்குகள் அல்லது ஆணையம் வெளியிட்ட நடைமுறைக் குறியீட்டை (Code of Practice) பின்பற்றத் தவறினால், அந்த பாதுகாப்பு நீக்கப்படும். அத்தகைய சந்தர்ப்பங்களில் சேவை வழங்குநரும் பொறுப்புக்குட்படுவார்.
மூன்றாம் தரப்பினர் மேற்கொள்ளும் தலையீடு, ஹாக்கிங் அல்லது தவறான பயன்பாடு போன்ற நடைமுறை யதார்த்தங்களையும் பிரிவு 27 ஏற்றுக் கொள்கிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட காலத்திற்குள் உள்ளடக்கம் அகற்றப்பட்டிருந்தால், ஆன்லைன் கணக்கு உரிமையாளர் அல்லது சேவை வழங்குநர் பொறுப்பாளியாகக் கருதப்படமாட்டார். ஆனால் நடைமுறைக் குறியீட்டை மீறி, பிறருக்கு தவறான இழப்பை ஏற்படுத்தினால், இழப்பீடு வழங்க வேண்டிய சிவில் பொறுப்பு உருவாகலாம்.
முடிவுரை
பிரிவுகள் 21, 24 மற்றும் 27 ஒன்றாகப் பார்க்கப்படும்போது, சமநிலையான சட்ட கட்டமைப்பு உருவாகியுள்ளது.
பிரிவு 21, சிறுவர்களுக்கு எதிரான கடுமையான ஆன்லைன் குற்றங்களையும் அவற்றுக்கு துணைபோகுவோரையும் தண்டிக்கிறது.
பிரிவு 24, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை உடனடியாக நிறுத்த நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. பிரிவு 27, நடுநிலையான சேவை வழங்குநர்களை பாதுகாக்கும் போதே, தவறுகளில் ஈடுபடுவோர் அல்லது கடமைகளை அலட்சியம் செய்பவர்களைப் பொறுப்புக்குட்படுத்துகிறது.
எளிய வார்த்தைகளில் சொன்னால், இந்த சட்டம் குற்றவாளிகளைத் தண்டிக்கிறது, சேதத்தை விரைவாக நிறுத்துகிறது, பொறுப்புள்ள சேவை வழங்குநர்களை பாதுகாக்கிறது, அதே நேரத்தில் ஆன்லைன் தளங்களை தவறாக பயன்படுத்துவோரை பொறுப்பேற்கச் செய்கிறது.
