மின்சார கட்டணத்தை குறைப்பதற்குப் பதிலாக உயர்த்த முயற்சி – சஜித்

0
28

மக்களால் வழங்கப்பட்ட ஆணையை தற்போதைய அரசு வெளிப்படையாக மீறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

மின்சார கட்டணத்தை 33 சதவீதம் குறைப்பதாக தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை கைவிட்டு, தற்போது 11.57 சதவீதம் மின்சார கட்டணத்தை உயர்த்த அரசு திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தீவிரமான வானிலை பாதிப்புகள் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக மின்சார கட்டண உயர்வை அமல்படுத்த அரசு முயல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது என அவர் கூறினார்.

“பொஹொசத் ரட்டக் லஸ்ஸன ஜீவிதயக்” (செழிப்பான நாடு – அழகான வாழ்க்கை) என்ற வாக்குறுதியுடன் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த தற்போதைய அரசு, இன்று அதற்கு நேர்மாறாக ஒரு ஏழை நாடையும், ஏழையான வாழ்க்கையையும் உருவாக்கும் பாதையில் பயணிக்கிறது எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பிரசார காலங்களில் பல மேடைகளில், ரூ.9000 மின்சார கட்டணம் ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணம் ரூ.2000 ஆகவும் குறைக்கப்படும் என்று கூறி 33 சதவீத கட்டணக் குறைப்பை வாக்குறுதி அளித்த அரசின் உறுப்பினர்கள், இன்று அந்த வாக்குறுதிகளை மறந்து மின்சார கட்டணத்தை உயர்த்த முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.

மின்சார கட்டணத்தை குறைப்போம் என்ற உறுதியின் அடிப்படையிலேயே கோடிக்கணக்கான மக்கள் இந்த அரசை ஆட்சிக்கு கொண்டு வந்ததாகவும், ஜனாதிபதியே இதனை பொதுமக்கள் முன் வெளிப்படையாக கூறியிருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.

இருப்பினும், இன்று மக்களின் தோள்மீது ஏறி அதிகாரத்திற்கு வந்த அரசு, மக்களால் வழங்கப்பட்ட ஆணையை ஏன் துரோகம் செய்கிறது என்ற கேள்வியை தான் எழுப்புவதாக சஜித் பிரேமதாச கூறினார்.

மக்களின் ஆணையை இவ்வாறு மீறும் அரசுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் உள்ளது என்றும், மக்கள் விரோத நடவடிக்கைகள் மூலம் மக்களின் மீது அளவுக்கு மீறிய சுமையை ஏற்றுவதை கடுமையாக கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here