பாதாள உலகை யார் ஆரம்பித்திருந்தாலும், யார் ஆதரவு வழங்கியிருந்தாலும், அதை முழுமையாக ஒழிப்பது தற்போதைய அரசே என நீதித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைத் துறை நிர்வாக அதிகாரிகளின் கூட்டத்திலும், அரசின் மூலம் சிறைச்சாலை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.913.60 மில்லியன் மதிப்புள்ள 10 வான் வாகனங்கள், 3 டிராக்டர்கள் மற்றும் ரூ.104.30 மில்லியன் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் கணினிகள வழங்கப்பட்ட நிகழ்வில் இன்று (02) காலை சிறைச்சாலைத் துறை வளாகத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.
இதனுடன், எதிர்காலத்தில் 40 பேருந்துகள் மற்றும் 5 கழிவு நீர் டாங்கிகள் (Gully Bowser) வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய அமைச்சர்,
சிறைச்சாலைத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் அரச சேவையில் மிகச் சிக்கலானதும், அதிக பொறுப்புகளைக் கொண்டதுமான பணியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார். கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் பணியாற்ற வேண்டியுள்ளதுடன், தவறுகளுக்கு இடமளிக்க முடியாத சூழ்நிலையில் அவர்கள் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.
மனித கௌரவத்தை மதித்து பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல், குற்றவாளிகளை மறுசீரமைத்து மீண்டும் சமூகத்துடன் இணைப்பதன் மூலம் சமூக பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்புகள் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். இவை எளிதான பணிகள் அல்ல என்றும், பெரும்பாலும் சமூகத்திற்கு புலப்படாத சேவையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு முடிவடைந்திருந்தாலும், அந்த ஆண்டில் ஏற்பட்ட கடும் இயற்கை அனர்த்தங்கள் மூலம் பெற்ற பாடங்களை மறக்க முடியாது எனக் கூறிய அமைச்சர், நெருக்கடியான சூழ்நிலையில் அரசு அமைப்புகளில் உள்ள பலவீனங்கள், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரச ஊழியர்களின் வலிமை, மற்றும் பிரச்சினை நேரங்களில் மனிதநேயமே மேலோங்குகிறது என்பதைக் கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
சிறைச்சாலை அமைப்பில் காணப்படும் பிரச்சினைகள் கடந்த 30–40 ஆண்டுகளாக நிலவி வருபவை என்றும், அவை சமீபத்திய அரசுகளாலோ அல்லது அதிகாரிகளின் தவறுகளாலோ மட்டும் ஏற்பட்டவை அல்ல என்றும் அவர் கூறினார். எனினும், அவற்றை தீர்ப்பது தற்போதைய அரசின் பொறுப்பு எனவும் அவர் வலியுறுத்தினார்.
சிறைச்சாலைகளில் காணப்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, மூன்று மாதங்களுக்குள் இரசாயன ஆய்வக அறிக்கைகள் வழங்கக்கூடிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சமூக மறுசீரமைப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிய சமூக மறுசீரமைப்பு சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நீண்டகால கைதிகளை மறுபரிசீலனை செய்து விடுதலை செய்யும் நடைமுறைகளும் அமல்படுத்தப்பட வேண்டுமென அவர் கூறினார்.
மேலும், பாதாள உலகத்தினால் சிறைச்சாலை அதிகாரிகள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்து வருவதை அரசு நன்கு அறிந்துள்ளதாகவும், ஜனாதிபதியின் தலைமையின் கீழ் பாதாள உலகம் என்ற “புற்றுநோயை” முழுமையாக ஒழிப்பதே அரசின் நோக்கம் எனவும் அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார உறுதியளித்தார். சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக அரசு எப்போதும் உறுதியாக நிற்கும் எனவும், அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்கவும் உரையாற்றினார். நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலை ஆணையர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
