“சொந்த வீடு – அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்பு திட்டம் உள்ளிட்ட வீடமைப்பு திட்டங்களின் திட்டமிடல் மற்றும் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் இன்று (02) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனைத்து வீடமைப்பு திட்டங்களையும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்து, மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இந்த திட்டங்கள் அனைத்தையும் ஒரே நிறுவனம் மூலம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
2026 வரவு–செலவுத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக ரூ.10,200 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டம் மற்றும் யுத்தச் சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக ரூ.5,000 மில்லியன் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்பு திட்டம் தொடர்பான திட்டங்கள், தற்போதைய நிலை மற்றும் அவற்றை நிறைவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டங்கள் குறித்து ஜனாதிபதி இந்நிகழ்வில் விரிவாக அவதானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கடந்த ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை நிறைவடையாத வீடமைப்பு திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
