இதைவிட மக்களுக்காக அரசு செய்ய வேண்டிய பணிகள் உள்ளன – மகிந்த ராஜபக்ச
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதைக் காட்டிலும், அரசாங்கம் மக்களுக்காக மேற்கொள்ள வேண்டிய வேறு முக்கியமான பணிகள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் இலங்கை பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கேள்வி: 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து தற்போது அடிக்கடி பேசப்படுகிறது. இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன? நீங்கள் இது தொடர்பாக அதிகம் பேசுவதை நாங்கள் காணவில்லை.
மகிந்த ராஜபக்ச:
“இல்லை. இதைவிட எங்களுக்கு செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன. 22ஆவது திருத்தத்தை கொண்டு வருவதைக் காட்டிலும், அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். அவற்றை செய்து முடித்த பின்னர், எந்தவொரு சட்டப்பிரிவையும் கொண்டு வந்தாலும் பரவாயில்லை.”
கேள்வி: நீங்கள் கூறுவது, அரசாங்கம் தற்போது முக்கியத்துவம் வழங்க வேண்டிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்பதுதானா?
மகிந்த ராஜபக்ச:
“ஆம். அதுதான் எங்களுக்கும் இருக்கும் பிரச்சினை. முன்னுரிமை வழங்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. தேவையற்ற விடயங்களையே முன்னிலைப்படுத்துகின்றனர்.
மறுபுறம், மக்களுக்கு இந்தப் பிரச்சினையை விட பல முக்கியமான பிரச்சினைகள் உள்ளன. மக்கள் உணவு, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதுதான் பிரச்சினையாக உள்ளது.”
மகிந்த ராஜபக்ச நேற்று (21) ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
