கடந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் நிறைவடையும் போது இலங்கையின் வரவு–செலவுப் பற்றாக்குறை ரூ.109.7 பில்லியனாகக் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் வரவு–செலவுப் பற்றாக்குறை ரூ.556.1 பில்லியனாகப் பதிவாகியிருந்தது.
2026 ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருவாய் மற்றும் மானியங்கள் 25.1% அதிகரித்து ரூ.3,421.3 பில்லியனாக உயர்ந்துள்ளன. அதேவேளை, மொத்த செலவினம் மற்றும் நிகர கடன் வழங்கல் 7.3% அதிகரித்து ரூ.3,531 பில்லியனாக பதிவாகியுள்ளது.
இதனிடையே, 2026 மே மாத இறுதியில் மத்திய அரசின் மொத்தக் கடன் ரூ.30,795.04 பில்லியனாக இருந்துள்ளது. இதில் உள்நாட்டுக் கடன் ரூ.18,609.43 பில்லியனாகவும், ரூபாயில் மதிப்பிடப்பட்ட வெளிநாட்டுக் கடன் ரூ.12,185.61 பில்லியனாகவும் காணப்படுகிறது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
செப்டம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரையான காலப்பகுதியில் மத்திய கிழக்கு மோதல்கள் நீடித்ததுடன், முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகள் மீதான தாக்குதல்கள் காரணமாக விநியோகத் தடைகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்துள்ளது.
வார இறுதியில் Brent மற்றும் WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100 அமெரிக்க டொலர் அளவைத் தாண்டியுள்ளது.
முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் Brent கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 12 டொலரும், WTI விலை 10.77 டொலரும் அதிகரித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
2026 ஆகஸ்ட் இறுதியில் இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு தற்காலிகமாக 6,905 மில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சீன மக்கள் வங்கியுடன் (PBOC) மேற்கொள்ளப்பட்டுள்ள நாணய பரிமாற்ற வசதியும் உள்ளடங்குகிறது.
மேலும், 2026 ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பணப் பரிமாற்றங்கள் 748.6 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளன. 2025 ஆகஸ்ட் மாதத்தில் இது 680.8 மில்லியன் டொலராக இருந்தது.
எனினும், செப்டம்பர் 11ஆம் தேதி நிலவரப்படி, இந்த ஆண்டின் தொடக்கம் முதல் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் 5.7% வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
