சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பௌத்த பிக்குகள், சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடையை அணிவதற்கு அனுமதிக்க வேண்டும் என விசேட குழு பரிந்துரைத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பௌத்த நிக்காய அந்தப் பிக்குவின் காவி உடையை அணியும் உரிமையை மறுக்காதவரை, சிறையில் உள்ள பிக்குகள் காவி உடையை அணியலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் 356ஆம் நிலையான விதியில் திருத்தங்களை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது. சிறையில் அனுமதிக்கப்படும் பௌத்த பிக்கு ஒருவர் காவி உடையைக் களைய வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்காக, பௌத்த விவகாரத் திணைக்களத்துடன் கலந்தாலோசிக்க சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
மேலும், விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக, நடைமுறையில் உள்ள சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் நிலையான உத்தரவுகளைத் திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழுள்ள விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் நிலையான உத்தரவுகளை மீளாய்வு செய்து புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு, தனது இடைக்கால அறிக்கையை இன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்துள்ளது.
