யாழ்ப்பாணத்தில் ‘Comfort Care Home’ நிவாரணப் பராமரிப்பு மையம் திறந்து வைப்பு

0
41

வாழ்க்கையின் கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு அன்பான பராமரிப்பையும் மனநிம்மதியையும் வழங்கும் நோக்கில், யாழ்ப்பாணம் சாவகச்சேரி சரசாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘Comfort Care Home’ நிவாரணப் பராமரிப்பு மையம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று (24) காலை திறந்து வைக்கப்பட்டது.

20 தனிப்பட்ட அறைகளைக் கொண்டுள்ள இந்த மையத்தில், வலி நிவாரண சிகிச்சை, ஒக்சிஜன் சிகிச்சை மற்றும் 24 மணிநேர தாதியர் பராமரிப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நோயாளிகளின் மனநலனைக் கருத்திற்கொண்டு ஆன்மீகப் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவ ஆலோசனைகளுக்கு ஏற்ப சத்தான உணவுகளை வழங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த மையத்தின் சிறப்பம்சமாக, இச்சேவைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்திற்காக 350 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களும் பங்களிப்பு வழங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் வசிக்கும் ஓய்வுபெற்ற சிறுநீரக நோய் நிபுணரான வைத்தியர் கே. தேவகாந்தன் இந்த மையத்தை அமைப்பதில் முன்னின்று செயற்பட்டுள்ளதுடன், அதன் நிறுவுநராகவும் தற்போதைய தலைவராகவும் உள்ளார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நவீன மருத்துவத்தின் வளர்ச்சியால் பல நோய்களைக் குணப்படுத்த முடிந்தாலும், சில நோய்களின் இறுதிக்கட்டங்களில் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார். இத்தகைய சூழ்நிலைகளில் நோயாளிகளின் வலியைக் குறைத்து, அவர்களுக்கு மனநிம்மதி, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை வழங்குவது சுகாதார சேவையின் முக்கியமான மனிதாபிமானப் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

புற்றுநோய் மற்றும் உடல் உறுப்புகள் செயலிழத்தல் போன்ற நோய்களின் இறுதிக்கட்டத்தை எதிர்கொள்ளும் நோயாளிகள் கடுமையான உடல் உபாதைகளுக்கு உள்ளாவதுடன், அவர்களது குடும்பத்தினரும் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் சுமைகளை எதிர்கொள்வதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நோயாளிகள் தனிமைப்படுத்தப்படாமலும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படாமலும், அவர்களின் உடல், மன மற்றும் ஆன்மீகத் தேவைகளைக் கருத்திற்கொண்டு பராமரிப்பு வழங்குவதில் நிவாரணப் பராமரிப்பு மையங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்துப் பிரஜைகளுக்கும் சமமான மற்றும் நியாயமான சுகாதார சேவைகளை வழங்குவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்த அமைச்சர், மக்களின் ஒட்டுமொத்த நலனை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் தலையீட்டுடன் சமூகத்தின் ஒத்துழைப்பும் அவசியம் என்றார்.

இந்த மையத்தை அமைப்பதற்காக ஒரு ஏக்கருக்கும் அதிகமான காணியை மறைந்த ஆசிரியர் கனகசபையின் குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த மையத்தின் நிறுவுநர்களான வைத்தியர் கே. தேவகாந்தன் மற்றும் கதிர்காமநாதன் பாலேந்திரன் உள்ளிட்டோரின் பங்களிப்புகளைப் பாராட்டிய அமைச்சர், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த மார்க் பென்னி, கெல்லி ககீ மற்றும் கனடாவில் வசிக்கும் வைத்தியர் வரகுணன் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வாழ்க்கையின் கடினமான கட்டத்தில் இருக்கும் எந்தவொரு நோயாளிக்கும் தேவையான பராமரிப்பு மறுக்கப்படக் கூடாது என வலியுறுத்திய அமைச்சர், இத்தகைய மையங்கள் நோயாளிகளின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் மனரீதியான சுமைகளைக் குறைக்க உதவும் என்றார்.

அத்துடன், நீண்டகாலப் பராமரிப்பு மற்றும் நிவாரண சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு இவ்வாறான மையங்கள் மூலம் சேவைகளை வழங்குவதால், அரச வைத்தியசாலைகளின் வசதிகளை அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்காக வினைத்திறனுடன் பயன்படுத்தவும் முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மையம் வடமாகாணத்துடன் மட்டுப்படுத்தப்படாமல், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இத்தகைய மனிதாபிமான நிவாரணப் பராமரிப்பு சேவைகளை நிறுவுவதற்கு முன்னுதாரணமாக அமையும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

மையத்தின் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்குப் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் நிகழ்வின்போது வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here