ஈஸ்டர் தாக்குதல் – ‘கபூர் மாமா’வுக்கு மேலும் 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

0
39

முஹம்மது ஷரீஃப் ஆதம் லெப்பைக்கு (63), கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவரும், ‘கபூர் மாமா’ என அழைக்கப்படுபவருமான முஹம்மது ஷரீஃப் ஆதம் லெப்பைக்கு (63), கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று (ஒக்டோபர் 28) மேலும் 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

வண்ணாத்திவில்லு – லாக்டோவத்த பகுதியில் வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைச் சேகரித்து வைத்திருந்தமை தொடர்பாகத் தொடரப்பட்ட மற்றுமொரு வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதிகள் குழு இந்தத் தண்டனையை விதித்துள்ளது.

சஹ்ரான் ஹாஷிமின் சாரதியாகச் செயற்பட்ட இவர், வண்ணாத்திவில்லு பகுதியில் வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

ஏற்கனவே, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில் இவருக்கு 240 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட தினத்தில், நீதிமன்றத்திலிருந்து வெளியேறும்போது ஒற்றை விரலை உயர்த்திக் காட்டியவாறு சிரித்த முகத்துடன் அவர் சென்ற புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில், வண்ணாத்திவில்லு பகுதியில் வெடிபொருட்களைச் சேகரித்து வைத்திருந்தமை தொடர்பான மற்றுமொரு வழக்கிலும் அவருக்கு தற்போது மேலும் 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here