ஏர்பஸ் ஊழல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

0
18

ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி சிறைச்சாலை ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, நீதிபதி பிரியந்த லியனகே தலைமையிலான கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளால் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

எனினும், உரிய அறிவித்தல் வழங்கப்படாத காரணத்தினால், வழக்கைத் தொடரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

நாமல் ராஜபக்ஷ சார்பில், சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜரானது.

இதன்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர், பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை கோருவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து, வழக்கை மீண்டும் நவம்பர் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினம் சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவை சிறைச்சாலை ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டது.

வழக்கின் பின்னணி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஷமிந்திர ராஜபக்ஷ, பிஸ் சொலியூஷன்ஸ் நிறுவனம் மற்றும் பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here