அரசியல் அதிகாரத்தை NPP ஒருபோதும் விட்டுக் கொடுக்காது

0
11

தேசிய மக்கள் சக்தி தேர்தல்கள் மூலம் பெற்றுக்கொண்ட அரசியல் அதிகாரத்தை மீண்டும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும், அந்த அதிகாரத்தைப் பாதுகாத்து மேலும் பலப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

“நாம் தற்போது புதியதொரு அரசியல் சூழ்நிலையில் இருக்கின்றோம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற கட்டத்தில் நாம் இப்போது இல்லை. ஏற்கனவே பெற்றுக்கொண்ட அரசியல் அதிகாரத்தைப் பாதுகாக்க வேண்டும். அதேவேளை, அந்த அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தவும் வேண்டும்.

நாம் பெற்றுக்கொண்ட அரசியல் அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதனை மீண்டும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. இன்னும் மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும் நாமே மீண்டும் ஆட்சிக்கு வருவோம். இதனை இன்றைய இந்த மாநாட்டின் மூலமும் உறுதிப்படுத்துகின்றோம்.

அப்படியானால், யாரிடமிருந்து இந்த அரசியல் அதிகாரத்தைப் பாதுகாக்க வேண்டும்? தொழிலாளர் வர்க்கத்திலுள்ள துரோகிகளிடமிருந்தே அதனைப் பாதுகாக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (07) கொழும்பில் நடைபெற்ற “இரண்டு ஆண்டுகள் – நாட்டுக்கு நல்வாழ்வு” எனும் தொழிற்சங்கங்களின் தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here