வங்காள விரிகுடாவில் உருவாகும் வலுவான புயல் – இலங்கையில் மழை குறைய வாய்ப்பு!

0
13

இலங்கைக்கு வடகிழக்கே, வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (15) இரவு 11.30 மணியளவில், திருகோணமலையிலிருந்து சுமார் 640 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்குப் பகுதியில் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டிருந்தது.

இது தொடர்ந்து இலங்கையை விட்டு விலகிச் செல்வதுடன், இன்று (நவம்பர் 16) மாலை தெற்கு மற்றும் அதனை அண்மித்த மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் புயலாகவும், நவம்பர் 17ஆம் திகதியளவில் மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் வலுவான புயலாகவும் உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று (நவம்பர் 16) முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here