நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையேயான மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனக் கூறியிருந்தார். இதன் காரணமாக தமிழக மீனவர்கள் பிரச்சினை முடிவுக்கு வரும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடி மீனவர்கள் பத்து பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவர்களை காங்கேசன்துறை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாக தமிழக மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.