தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை நாளை (02) முதல் மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பிரபாத் சுகதாச தெரிவித்துள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 5 தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்து அமுலில் இருக்கும். நாளை காலை 08.00 மணி முதல், மேலதிக நேர கடமைகளில் இருந்து விசேட வைத்திய நிபுணர்கள் விலகவுள்ளனர்.
இதன் காரணமாக, அந்தந்த வைத்திய நிபுணர்கள் அவர்கள் இணைக்கப்பட்ட வைத்தியசாலைகளில் மாத்திரமே பணியாற்றுவார்கள். இதனால் நாடு முழுவதும் உள்ள 164 அலகுகளின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் இவ்வளவு பாரிய நெருக்கடி நிலவும் வேளையில், சுகாதார அமைச்சர் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடுவது வருத்தமளிப்பதாக வைத்தியர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலைக் கட்டமைப்பிற்குள் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் பணியாற்றுவதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாகஅத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு. சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை. மனித வளப் பற்றாக்குறை.
இந்தக் குறைபாடுகளினால் இறுதியாக அப்பாவி நோயாளர்களே துயரங்களுக்கு உள்ளாகின்றனர். இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு மக்கள் படும் அவதி குறித்து சுகாதார அமைச்சரோ அல்லது அரசாங்கமோ இதுவரை எவ்வித கவனமும் செலுத்தவில்லை எனவும் அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
