கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று(19) முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கனேமுல்லே சஞ்சீவ என்றழைக்கப்படுகின்ற சஞ்சீவ குமார சமரரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதன் பிரதான சந்தேகநபர் கொலை சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டார்.
புத்தளம் – பாலாவி பகுதியில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற குழுவொன்றின் தலைவரான கனேமுல்லே சஞ்சீவ பூசா சிறைச்சாலையில் இருந்து புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட பாதுகாப்பின் கீழ் அழைத்துவரப்பட்டார்.
பின்னர் அவர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தின் 5ஆம் இலக்க அறையில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
வழக்கு விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்தார்.
சம்பவம் இடம்பெற்றபோது ஏற்பட்ட நெரிசலால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த பெண்ணொருவரும் சிறு காயங்களுக்கு உள்ளானார்.
சந்தேகநபர் துப்பாக்கியை மறைத்து கொண்டுவந்ததாக சந்தேகிக்கப்படும் புத்தகமொன்று சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த புத்தகம் சட்டத்தரணிகள் அதிகம் பயன்படுத்தும் குற்றவியல் சட்டக்கோவையாகும்.