சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் 19 ஆம் திகதி ஆரம்பமானது. முன்னதாக 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், எதிரணியின் கோரிக்கையின் பிரகாரம் விவாதத்துக்கு மேலும் ஒருநாள் ஒதுக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களைப் புறந்தள்ளிய வகையிலேயே அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்து, சபாநாயகரைக் காப்பாற்றுவதற்கு ஆளும் தரப்பும் பல்வேறுபட்ட வியூகங்களை வகுத்துள்ளது.